சென்னை: லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் சமீன் சர்மா ஆகியோரை ஏன் விசாரிக்கவில்லை. அவர்களிடம் விசாரிக்க விடாமல் ஆணையத்தை தடுத்தது யார் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் என்.ராஜா செந்தூர்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’யிடம் அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சுமார் 160 சாட்சிகள் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் எந்தவொரு சாட்சியும் வி.கே.சசிகலா மீது தவறு இருக்கிறது, குறை இருக்கிறது என குற்றம்சாட்டவில்லை. அந்த சாட்சிகளிடம் நானே குறுக்கு விசாரணை நடத்தியுள்ளேன்.
‘ஆணையத்துக்கு மருத்துவ ஞானம் இல்லை. நாங்கள் ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை அளித்தோம் என்பதை சரியாக புரிந்துகொள்ளும் வகையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும்’ என கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2021 நவம்பர் 30-ல் இதுதொடர்பாக ஒரு குழுவை அமைக்க எய்ம்ஸ்-க்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘ஆணையம் தனது எல்லையை மீறி சென்று விடக்கூடாது. அப்போலோ மருத்துவமனையால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை போதுமானதா, போதுமானதாக இல்லையா என்பது குறித்த அறிக்கையை ஆணையம் அரசிடம் சமர்ப்பிக்கலாம். ஆனால், அந்த அறிக்கை முழுக்க முழுக்க ஆணையத்தால் விசாரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் ஆவண சாட்சியங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. அப்படியென்றால், நீதிபதி ஆறுமுகசாமியின் சந்தேகம், ஊகம், இப்படி இருக்கலாம் என்ற எண்ணம் எதுவுமே இந்த எல்லைக்குள் வரக்கூடாது.
ஆனால், எல்லையைத் தாண்டி செயல்பட்டு, ஆணையம் தனது ஊகத்தை கூறியுள்ளது. அந்த ஊகத்துக்கு அடிப்படை ஆதாரம் வேண்டாமா? லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, அமெரிக்க மருத்துவர் சமீன் சர்மா ஆகியோரை ஆணையம் ஏன் விசாரிக்கவில்லை? அவர்களிடம் விசாரிக்க வேண்டாம் என தடுத்தது யார்? அவர்களிடம் விசாரித்து இருந்தால், ஜெயலலிதாவுக்கு உலகத்தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என கூறியிருப்பர். அவர்களை இந்த ஆணையம் திட்டமிட்டே விசாரிக்காமல் விட்டுள்ளது.
அதேபோல, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை அளிக்க சசிகலா தடுத்ததாக எந்த சாட்சியும் கிடையாது. அது எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்பட ஒட்டுமொத்த மருத்துவர்களின் ஒருமித்த கருத்து. முறையற்ற சிகிச்சை அளிக்கப்படவில்லை என சசிகலா மீது குற்றம்சாட்ட ஒரு சாட்சிகூட கிடையாது. டிஜிபி, கூடுதல் டிஜிபி, ஐஜி என 9 போலீஸ் உயரதிகாரிகளிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. அதில் சதித்திட்டம் குறித்து யாருமே ஒன்றும் கூறவில்லை.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் எண்ணமும், புரிதலும் தவறாக இருக்கிறது. வி.கே.சசிகலா, சிவக்குமார், சி.விஜயபாஸ்கர், ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோர் மீது சந்தேகப்படுவதைத்தவிர வேறு எதுவுமில்லை என நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் யார் மீதும் குற்றம்சாட்ட சட்டத்தில் இடம் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.