1,050 கோடி ரூபாய் புதிய வகுப்பறைகளுக்கு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது 110 விதியின் கீழ் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். பள்ளிக்கல்வி தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித்துறையானது மகத்தான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் வண்ணம், காலை உணவுத்திட்டம், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என நமது அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றது.

இந்தச் சூழ்நிலையில், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கென அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றுச்சுவரும், பராமரிப்புப் பணிகளுக்கென சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியும் என மொத்தம் சுமார் 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி தேவை என்று கண்டறியப்பட்டு, அவற்றைப் படிப்படியாக ஏற்படுத்தித் தருவதற்கென ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி, நடப்பாண்டில் சுமார் ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. தரமான கல்வியை நமது அரசுப் பள்ளிகள் வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளார்கள். எனவே, அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயர்ந்துள்ளதால், கூடுதலான வகுப்பறைகள் கட்டத் திட்டமிடப்பட்டு உள்ளது. 

அதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாகக் கட்டப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென நடப்பாண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 150 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து, தற்போது 115 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசுப் பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளை நாடி வரும் மாணவர்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப்பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.