பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள தாசனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமே கவுடா (86). 50 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால் அங்கிருந்த தாவரங்களும், கால்நடைகளும் இறக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, 16 குளங்களை தனி ஆளாக சொந்த பணத்தில் வெட்டினார். இதனால் அங்கு தாவரங்களும், கால்நடைகளும் நீரின்றி தவிக்கும் நிலையை போக்கினார். இதன் காரணமாக வறண்ட பூமியாக இருந்த அந்த கிராமமே நெல், கரும்பு விளையும் நிலமாக மாறியது. காமே கவுடாவின் சேவையை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், காமே கவுடாவை வெகுவாக பாராட்டி பேசினார். இந்நிலையில் முதுமை காரணமாக காமே கவுடா நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.