Rupee Vs Dollar: இந்திய சந்தையில் இருந்து அன்னிய மூலதனம் தொடர்ந்து வெளியேறி வருவதாலும், டாலரின் மதிப்பு வலுப்பெறுவதாலும், புதன்கிழமை ரூபாயின் மதிப்பு மேலும் 61 காசுகள் சரிந்து ரூ.83 என்ற நிலையை எட்டியது. இது ரூபாயின் மிகப்பெரிய சரிவு என்று சொல்லலாம். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று 83.01 ஆக உள்ளது. முன்னதாக செவ்வாயன்று ரூபாய் மதிப்பு சரிந்து, 10 பைசா சரிவுடன் 82.40 ஆக இருந்தது.
அண்மையில் நாட்டின் நிதியமைச்சர், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை டாலரின் பலமாகப் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. உண்மையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ரூபாய் வீழ்ச்சியடைகிறது என்று ரிசர்வ் வங்கி உணரும்போது, அது டாலர்களை விற்கத் தொடங்குகிறது, அதில் நமது அந்நிய செலாவணி இருப்பு குறைகிறது. பெரும்பாலான இறக்குமதிகள் டாலரில் மட்டுமே செய்யப்படுகின்ற. இதனால் ரூபாய் மதிப்பு குறைவது, அன்னிய செலாவணி மாற்று விகிதத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது தான் பொதுமக்களிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம்.
இந்திய சந்தை ஏற்றம்
ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தாலும், இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து பல அமர்வுகளாக ஏற்றத்துடன் உள்ளது. இன்றைய சந்தையைப் பற்றி குறிப்பிடுகையில், சென்செக்ஸ் 146 புள்ளிகள் உயர்ந்து 59107 என்ற அளவிலும், நிஃப்டி 25 புள்ளிகள் அதிகரித்து 17512 என்ற அளவிலும் நிறைவடைந்தது. தொடர்ந்து நான்காவது முறையாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சிறந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் ஏற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக பங்கு சந்தைகள் வலுவடைந்து வருவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.