ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம்! தமிழகஅரசு

சென்னை: ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சென்னையில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் இன்று இரவு நள்ளிரவு முதல் அமலாகவுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்

தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்

ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சரக்கு ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே சரக்கை ஏற்றிச்செல்ல வேண்டும்.

இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும்.

இது நாள் வரை மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமே அபராதம் விதித்து வந்த நிலையில், இனி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் செய்யும் மதுகுடிக்காத அனைத்து நபர்களுக்கும் அபராதம் வசூல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தெரிந்த ஆட்டோ ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது, அந்த ஆட்டோ ஓட்டுநர் மது குடித்து இருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராதம் வசூலிக்கப்படும்.

சவாரிக்காக முகம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர்களுடன் பயணம் மேற்கொள்ளும்போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது. ஆனால், ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படும்.

மோட்டார் வாகனச் சட்டம் /s 185 r/w 188 MV விதிப்படி, இந்த அபராதமானது இன்று இரவு முதல் அமல்படுத்தப்படுகிறது.

சென்னை போக்குவரத்து காவல் இன்று இரவு முதல் இந்த விதியை பின்பற்றி மது குடித்து வாகனம் ஓட்டுபவர் உடன் பயணம் செய்யும் நபர்களுக்கும் அபராதம் விதிக்க உள்ளது..ரூபாய் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை அபராதம் வசூல் செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.