ஆளுநருக்கு ஆப்பு வைத்த திமுக; போகும் இடமெல்லாம்.. அரசியல்!

தமிழக ஆளுநர் ரவி சமீபகாலமாக பொதுவெளியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இவ்வாறு கலந்துகொள்ளும் ஆளுநர் ரவி அவ்வப்போது, அரசியல் ரீதியிலும் கருத்து தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில் திருக்குறள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், கருத்து தெரிவித்து இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டின் கல்வி சதவீதம் தொடர்பாக ஆளுநர் பேசியது அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டு விழா மற்றும் ஹரிஜன் சேவா சங்கம் 90வது ஆண்டு விழா சென்னை, சேத்துப்பட்டு எஸ்ஆர்எஸ் சர்வோதயா பள்ளியில் சமீபத்தில் நடந்தது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசும்போது ‘இந்தியா தேசத்தை ஒருங்கிணைத்தவர் மகாத்மா காந்தி. நாட்டின் வளர்ச்சி என்கிற ஒற்றை நோக்கத்தில் மகாத்மா காந்தி செயல்பட்டார்.

தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக, தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை 51 சதவீத குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனர். மற்ற மாநிலங்களை விட ஏன்? இந்திய கல்வி விகிதத்தை விட, இது அதிகம்.

தமிழகத்தில் 24 சதவீதம் தலித் மக்கள் உள்ளனர். இவர்களில் 13 முதல் 14 சதவீதம் குழந்தைகளே பள்ளிக்குச் செல்கின்றனர். சில சமூகத்தினர் மட்டும் 70 முதல் 75 சதவீதம் அளவிற்கு கல்வி பெற்று உள்ளனர்’ என, ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருந்தார்.

தமிழக ஆளுநரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், திமுகவை சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் சரியான பதிலடி கொடுத்து இருந்தார்.

அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் கல்வி சதவீதம் குறித்தும், பட்டியலின மக்களின் கல்வி விதம் குறித்தும், தவறான தகவலை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் கல்வி சதவீதம் 39.6 ஆகும்.

இது..இந்தியாவின் மொத்த சராசரியை விட, 2 மடங்கு. தமிழகத்தில் கல்வி சதவீதம் என்பது 51.4 என்று புள்ளிவிபரத்தை எடுத்துவிட்டு,

எம்.பி செந்தில் குமார் தெறிக்கவிட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் எழிலன் பேசியதாவது:

தமிழ்நாட்டின் நியமன தலைமைகள் தரவுகளை தவறாக வெளியில் சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் கல்வி 51.7 சதவீதம். இதில், பட்டியல் இன மக்களின் கல்வி 39.6 சதவீதம்.

ஆனாலும் நியமனத் தலைமைகள் வேண்டும் என்றே அரசியல் செய்ய தரவுகளை தவறாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில், ‘நான் முதல்வர் திட்டம்’ செயல்பட்டு வருகிறது.

பரத் லால் என்பவர் ஒரு நிறுவனம் நடத்துகிறார். பரத் லால் நேர்காணல் நடத்தும்போது பிடெக், இன்ஜினியரிங் பயின்ற மாணவர்கள் வருகின்றார்கள். அனைத்து மாணவர்களும் ஐபிஎம் கிளவுட் படித்திருக்கிறோம் என கூறுகிறார்கள்.

அதற்கு பரத் லால், ‘எங்கே படித்தீர்கள்’ என்று கேட்கிறார். அனைத்து மாணவர்களும்‘எங்கள் தமிழ்நாட்டு முதல்வர் திறந்துவைத்த நான் முதல்வன் திட்டத்தில் நாங்கள் ஐபிஎம் கிளவுட் படித்திருக்கிறோம்’ என சொல்கிறார்கள்.

இதை கேட்ட பரத் லால், ‘தமிழ்நாட்டில் இப்படி ஒரு திட்டமாக?’ என வியந்து பாராட்டுகிறார். அப்படி இருக்கையில் மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் நியமன பதவியை சேர்ந்த ஒருவர், நமது மாநிலம் பற்றியே தவறான தகவல்களை தருகிறார்.

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த 18 மாத காலத்தில் அடிப்படைக்கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு, இளநிலை பள்ளி, முதுநிலைப் பள்ளி, திறன் மேம்பாடு தந்து அனைத்து நபர்களையும் வரி செலுத்தும் முனைவோராக மாற்றியுள்ளோம்.

ஆனால் வரி எங்கே செல்கிறது என்பது தான் எனது கேள்வி?’ இவ்வாறு திமுக எம்எல்ஏ எழிலன் பேசியிருக்கும் விவகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடுத்தடுத்த மூவ்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாகவே அமைந்துள்ளதால் ‘இனி.. வாயை திறக்கவே மாட்டார்’ என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.