"ஆளுநர் vs அரசு மோதல்" அதிகரிப்பு – ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா மோடி அரசு?!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா‘ என்ற பெயரில் நாடுமுழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பொதுக்கூட்டங்களிலும் பேசி வருகிறார். அவ்வாறு சமீபத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலையீடு செய்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் ஆட்சியை பா.ஜ.க-வால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் குறுக்கீடு செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று பேசியிருந்தார். 

இதற்குக் காரணம் தமிழகம், கேரளா, புதுவை, தெலங்கானா, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ‘ஆளுநர்களுக்கும் – அம்மாநில அரசுகளுக்கும்’ இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதல் போக்கே காரணமாகும் என அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். அதாவது, தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீண்ட நாள்களாக நிலவி வருகிறது. 

MK Stalin

இதற்குத் தமிழக அரசின் ‘நீட்’ விலக்கு மசோதா  உள்ளிட்ட மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் வைத்துக் கொண்டது, மும்மொழி கல்விக் கொள்கை, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன சட்டம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கே உதாரணமாகும்.  இதையடுத்து ஆளுநரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என மத்திய அரசுக்கு தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள்  உள்ளிட்டோர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் முன்பு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது  பாஜகவால் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அப்போது அங்குத் தினம்தோறும் பிரச்னைகள் எழுத்து வந்தன. மேலும் நாராயணசாமி – கிரண்பேடிக்கும் இடையேயான மோதல் தொடர்பான செய்திகளே அப்போதைய தலைப்பு செய்திகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  பிறகு புதுவையில் துணை நிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பாகத் தமிழிசை செளந்திரராஜன் நியமிக்கப்பட்டார். தற்போது அங்கு பாஜக கூட்டணியிலான ஆட்சி நடக்கிறது. சமீப காலமாக சர்ச்சைகள் சற்று குறைத்துள்ளது. மேலும் முன்னர், மேற்குவங்கத்தில் ஆளுநராக இருந்த ஜெகதீஷ் தன்கருக்கும், (இந்திய குடியரசுத் துணை தலைவராக உள்ளார்) அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் வெடித்தது. 

Tamilisai Soundararajan

அப்போது அவர் அரசியலமைப்பு சட்டத்தின் 174-வது பிரிவு படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க மாநிலச் சட்டசபையை முடக்கி வைத்தார். அந்த கூட்டத் தொடரில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர மம்தா பானர்ஜி அரசு பரிசீலனை செய்திருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து தான்  அம்மாநிலத்தில் சட்டசபை கூடுவதையே ஆளுநராக இருந்த ஜெகதீஷ் தன்கர் நிறுத்தி வைத்தார். இது ஒட்டுமொத்த இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ட்விட்டரில் ஆளுநரை மம்தா பிளாக் செய்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெகதீஷ் தன்கர் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைபோல் தெலங்கானாவில் ஆளுநராக உள்ள தமிழிசை (கூடுதல் பொறுப்பாகப் புதுவைக்குத் துணை நிலை ஆளுநராக நியமனம்) அம்மாநிலத்தின் முதல்வராக உள்ள சந்திரசேகர ராவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

சந்திரசேகர ராவ்

இதற்குத் தமிழிசை நடத்திய மக்கள் குறைதீர் கூட்டமே காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து தெலங்கானா சட்டசபை கூட்டத் தொடரில் தமிழிசையை ஆளும் கட்சி புறக்கணித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் கேரளா மாநிலத்திலும் பிரச்னை வெடித்துள்ளது. அம்மாநிலத்தில் 13 மாநில பல்கலைக்கழகங்களுக்குத் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் அதிகாரங்களைக் குறைக்கும் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவில் கையெழுத்திடுமாறு உயர்கல்வி துறை அமைச்சர் ஆர் பிந்து கூறியிருந்தார்.

இதையடுத்து ஆளுநர் ஆரிப் முகமது கான் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் நியமன குழுவிற்கு செனட் கூட்டத்தை நடத்துவதற்கான தனது வழிகாட்டுலுக்கு இணங்காததற்காகப் பல்கலைக்கழக செனட்டின் 15 உறுப்பினர்களை நீக்கிவிட்டார். இதனால் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிரச்னை உள்ள இடங்களில் எல்லாம் பா.ஜ.க ஆட்சி செய்யவில்லை. இதனால் தான் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை ஆயுதமாகக் கொண்டு, மோடி அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக  அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். 

ஆனால், பாஜக தரப்பினர்களோ ஆளுநர்கள் தங்களின் கடமையை மட்டுமே செய்வதாகவும், தங்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகார வரம்புக்குள் மட்டுமே செயல்படுவதாகவும் கூறிவருகிறனர். மேலும் மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்பது ஜனநாயகத்தில் அடிப்படையான விஷயம் தான் என்றும், அது எப்படி மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது ஆகும் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். பல்கலைக்கழக விவகாரங்களை பொறுத்த வரையில் ஆளுநர் வேந்தர் என்ற முறையில் மட்டுமே செயல்படுவதாகவும் கூறுகிறார்கள்.

அவர்கள் இவ்வாறு விளக்கம் அளித்தாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இவ்வாறான முரண்கள் ஏற்படாமல் இருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.