காந்திநகர்: இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே, வடக்கு குஜராத்தில் உள்ள தீசாவில் புதிய விமானப்படைத் தளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். அப்போது, ரூ.15,670 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவைத்த பிரதமர், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக, காந்தி நகரில் உள்ள மகாத்மா காந்தி கண்காட்சி மையத்தில், ராணுவக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மேலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே, வடக்கு குஜராத்தில் உள்ள தீசாவில் புதிய விமானப்படைத் தளத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: புதிய விமானப்படைத் தளம், நம் நாட்டின் பாதுகாப்புக்கான சிறந்த மையமாக உருவாகும். இறக்குமதி செய்ய முடியாத 101 பொருட்களின் பட்டியலை பாதுகாப்புப் படைகள் வெளியிடும். அவற்றின் மூலம், பாதுகாப்புத் தொடர்பான 411 தளவாடங்களை உள்நாட்டில் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் உலகின் பெரிய நாடாக இந்தியா இருந்தது. கடந்த ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத் தளவாடங்களின் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாம் ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறோம். பாதுகாப்புத் துறை தொடர்பான இக்கண்காட்சி, சில நாடுகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பல நாடுகள் நேர்மறையான எண்ணத்துடன் நம் நாட்டுடன் கைகோத்துள்ளன. பிரம்மோஸ் ஏவுகணை நமது தயாரிப்பில் மிகச் சிறந்தது. ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை வாங்க பாதுகாப்புத் துறையின் பட்ஜெட்டில் 68 சதவீத நிதி செலவாகிறது. தற்போது, உள்நாட்டிலேயே அதிக அளவு ஆயுதங்களைத் தயாரிப்பதால், செலவு குறையும். இவ்வாறு பிரதமர் பேசினார்.