இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய தானியங்களில் இருந்து உருவாகுது பல்சுவை பலகாரங்கள்: உடலுக்கு கேடு விளைவிக்காத உன்னத சுவை

சாயல்குடி: ராமநாதபுரத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாரம்பரிய தானியங்களிலிருந்து சுவைமிகு பலகாரங்கள் தயாராகி வருகின்றன. தீபாவளி என்றாலே புத்தாடைக்கு அடுத்தபடியாக இனிப்புகள்தான் விசேஷம். தற்போது வீட்டில் பலகாரங்கள் செய்வது வெகுவாக குறைந்து விட்டது. கடையில்தான் வாங்கி ருசிக்கின்றனர்.

இதில் ரசாயனம், கலப்பட சேர்மானங்கள் சேர்க்க வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் பலகாரங்களை தயாரித்து சாப்பிட்டதால் உடலுக்கு நல்லது. அந்த வகையில் ராமநாதபுரத்தில் தீபாவளிக்காக இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட பாசிப்பயிறு, ரவா, தினை, கம்பு, ராகி, வேர்க்கடலை, எள்ளு உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு 7 வகையான லட்டு,
மாப்பிள்ளை சம்பா அரிசியில் அதிரசம், ஆத்தூர் கிச்சடி சம்பா அரிசியில் முறுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற சுவையான லட்டு என விற்பனை செய்யும் இயற்கை அங்காடி உள்ளது.

ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியை சேர்ந்த இயற்கை விவசாயி முருகேசன், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நிலத்தில் இயற்கை முறையில் நெல், மிளகாய், பாசிப்பயறு, உளுந்து, தினை, குதிரைவாலி, கேப்பை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களையும், காய்கறிகள் உள்ளிட்டவற்றை பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் இயற்கை அங்காடி நடத்தி, தனது நிலத்தில் விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு பலவிதமான இனிப்பு வகைகளை பண்டிகை காலங்களில் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். கம்பு, கேழ்வரகு, சோளம், எள்ளு, தினை, ராகி, நிலக்கடலை, எள்ளு, ரவா உள்ளிட்ட சிறு தானியங்களை வைத்து, இயற்கையான முறையில் ஏழு வகையான லட்டுகளை உற்பத்தி செய்து அங்காடியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா அரிசி, ஆத்தூர் கிச்சடி சம்பா அரிசி ஆகியவற்றை வைத்து முறுக்கு, அதிரசம்  உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.