இரட்டை நரபலிக்கு முன்பாக மேலும் ஒரு பெண் கொலை: விசாரணையில் லைலா அதிர்ச்சி தகவல்

திருவனந்தபுரம்: பத்தனம்திட்டாவில் இரட்டை நரபலிக்கு முன் மேலும் ஒரு பெண்ணை ஷாபி கொலை செய்ததாக பகவல் சிங்கின் மனைவி லைலா போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது ஷாபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். போலீசார் மூன்று பேரையும் தனித்தனியாகவும், பின்னர் ஒன்றாக வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லைலாவிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தியபோது, அவர் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார். நரபலி கொடுப்பதற்கு முன் ஷாபி அடிக்கடி பகவல் சிங்கின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது, ஒரு நாள் லைலாவிடம் ஷாபி பேசிக் கொண்டிருந்தபோது, தான் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏற்கனவே கொலை செய்ததாகவும், பின்னர் மனித மாமிசத்தை விற்பனை செய்ததில் ரூ.20 லட்சம் வரை கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். லைலா கூறிய இந்த தகவல் போலீசுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் ஷாபியிடம் விசாரித்தபோது, தான் லைலாவை நம்ப வைப்பதற்காகவே அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் போலீசார் ஷாபி கூறியதை நம்பவில்லை. இதனால் சமீபத்தில் எர்ணாகுளத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஷாபிக்கு மேலும் பெண்களின் பெயரில் இரண்டு போலி பேஸ்புக் கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. சஜ்னா, ஸ்ரீஜா என்ற பெயரில் இந்த கணக்குகள் உள்ளன. ஏற்கனவே ஸ்ரீதேவி என்ற போலி பெயரில் தொடங்கிய பேஸ்புக் கணக்கில் இருந்து தான் பகவல் சிங்கை ஷாபி ஏமாற்றினார். அதேபோல இதிலிருந்தும் ஷாபி யாரையாவது ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில், ஷாபி மற்றும் பத்மாவின் செல்போன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.