இளம்பெண் ஆசிரியை பாலியல் வன்கொடுமை வழக்கு; காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு 11 கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பேட்டையைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியையான இளம்பெண் கோவளம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், “பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ எல்தோஸ் குந்நப்பிள்ளில் என்னிடம் நெருக்கமாக பழகினார். பின்னர் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று அவரது கழுத்தில் கிடந்த செயினை அணிவித்து `உன்னை கைவிடமாட்டேன்’ என நெருக்கமாக இருந்தார். ஆனால் இப்போது அவர் என்னை விட்டு விலகிச் செல்கிறார். ஏன் விலகிச்செல்கிறீர்கள் எனக்கேட்டதற்கு குடி போதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். ஒருமுறை என்னை பலவந்தமாக கோவாளம் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச்சென்று தாக்கி சித்ரவதை செய்தார்” என இளம்பெண் கூறியிருந்தார். இதையடுத்து கோவளம் போலீஸார் எம்.எல்.ஏ எல்தோஸ் குந்நப்பிள்ளில் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தனர். இதையடுத்து எல்தோஸ் குந்நப்பிள்ளில் தலைமறைவாகிவிட்டார்.

புகார் அளித்த இளம் பெண்

இளம் ஆசிரியை கடந்த மாதம் 29-ம் தேதி எம்.எல்.ஏ மீது புகார் அளித்த பின்னரும் நடவடிக்கை எடுக்க தாமதமானதால் கோவளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இடம்மாற்றம் செய்யப்பட்டார். வழக்கு பதிவுசெய்த பின் அந்த இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது எம்.எல்.ஏ எல்தோஸ் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததும், கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து எல்தோஸ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும், கொலை மிரட்டல் பிரிவுகளிலும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இதற்கிடையே இளம்பெண்ணுக்கு மிரட்டல்விடும் விதமாக அந்த பெண்ணின் உறவினர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய எம்.எல்.ஏ எல்தோஸ், “ஒரு குற்றமும் செய்யாத எனக்கு எதிராக சதி செய்த உனக்கும், உன் குடும்பத்துக்கும் நான் நம்பும் கர்த்தாவான இயேசு தக்க பதில்தருவார். எனக்கு நல்ல நம்பிக்கை உள்ளது. பணத்தின் மீதான உனது ஆசை தீரும்போது சுயமாக சிந்தித்துப்பார். நான் மீண்டெழுவேன், கர்த்தர் என்னுடன் உண்டு” என மெசேஜில் கூறியிருந்தார்.

பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ எல்தோஸ் குந்நப்பிள்ளில்

மேலும், தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ எல்தோஸ் திருவனந்தபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த கோர்ட் 11 கடும் நிபந்தனைகளுடன் எல்தோஸுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதில், கேரளாவை விட்டு வெளியேறக்ககூடாது, அக்டோபர் மாதம் 22-ம் தேதிக்கும் நவம்பர் மாதம் 1-ம் தேதிக்கும் இடையில் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். ஐந்து லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்துவதுடன், இருவர் ஜாமீனில் கையெழுத்திட வேண்டும். செல்போன் மற்றும் பாஸ்வேட் ஆகியவற்றை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். புகார் அளித்த பெண்ணை அச்சுறுத்தவோ, தாக்கவோ கூடாது. சமூக வலைதளங்களில் ஆவேசப் பதிவுகள் போடக்கூடாது. தேவைப்பட்டால் விசாரணை அதிகாரிகளுக்கு சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கடும் நிபந்தனைகளுடன் எம்.எல்.ஏ எல்டோஸ் குந்நப்பிள்ளிக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

இது ஒருபுறம் இருக்க பாலியல் வழக்கு குறித்து எம்.எல்.ஏ எல்தோஸிடம் கேரள மாநில காங்கிரஸ் தலைமை விளக்கம் கேட்டது. அதற்கு விளக்கம் அளித்த எல்தோஸ், “பப்ளிக் ரிலேஷன் ஏஜென்சி ஊழியராகத்தான் அந்த இளம்பெண் எனக்கு அறிமுகம் ஆனார். அந்த பெண் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. என் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் கட்சி எனது தரப்பு விளக்கத்தைக் கேட்க வேண்டும்” என விளக்கம் அளித்ததுடன் அந்த இளம்பெண் மீது உள்ள வழக்குகளின் விவரங்களையும் எல்தோஸ் விளக்கத்துடன் இணைத்திருக்கிறார். எம்.எல்.ஏ-வின் விளக்கம் குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.சுதாகரன் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.