கள்ளக்குறிச்சி: தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், சென்னையில் இருந்து வந்து ஊரகப் பகுதியை குறிவைத்து ஆடு திருடுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். விவசாயம் சார்ந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஆடு வளர்ப்போர், விளை நிலங்களில் ஆடுகளை மேயவிட்டு, அவரவர் விளைநிலப் பகுதியில் உள்ள பட்டியில் மாலையில் ஆடுகளை அடைத்து வளர்த்து வருகின்றனர். அவ்வாறு வளர்க்கப்படும் ஆடுகளை சில கும்பல் அவ்வப்போது திருடுவதும், திருடும்போது கிராம மக்களிடம் சிக்கி, காவல் துறையினரிடம் ஒப்படைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. தற்போது தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ஆடு விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வரும் நிலையில் ஆடு திருடும் கும்பலும் கைவரி சையை காட்டத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம், பல்லகச்சேரி, மாடீர், பிரிதிவிமங்கலம், திம்மலை, காட்டுக் கொட்டகை ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போயுள்ளன. இது தொடர்பாக ஆடு வளர்ப்போர் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் தியாகதுருகம் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காரை மறித்தனர். காரில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்று, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தனர். போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கண்ணன் (24), மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது உசேன் (42), ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த லியாகத்அலி (43) என்பதும், அவர்கள் 9 ஆடுகளை திருடி காரில் கொண்டு சென்றதும் தெரியவந்தது. திருட்டு ஆடுகளை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.