புதுடில்லி, சிறையில் இருந்தபடி, 200 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக கூறப்படும் 82 சிறைத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு, புதுடில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று அனுமதி அளித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு பண மோசடி வழக்குகள் உள்ளன.
அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை தினகரனுக்கு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர், புதுடில்லியில் ரோஹிணி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, ‘போர்டிஸ் ஹெல்த்கேர்’ நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர்களான ஷிவிந்தர் மோகன் சிங் மற்றும் அவரது சகோதரர் மல்விந்தர் மோகன் சிங் ஆகியோர் வேறொரு வழக்கில் கைதாகி அந்த சிறையில் இருந்தனர்.
அவர்களுக்கு, ‘ஜாமின்’ வாங்கி தருவதாக கூறி, அவர்களது மனைவியரிடம் இருந்து 200 கோடி ரூபாய் பணத்தை சுகேஷ் சந்திரசேகர் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார்.
சிறையில் இருந்தபடியே மத்திய அரசு உயர் அதிகாரிகள் போல தொலைபேசியில் பேசி அவர்களை சுகேஷ் ஏமாற்றி உள்ளார்.
இந்த வழக்கை புதுடில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகருக்கு உதவிய சிறைத்துறை அதிகாரிகள் ஏழு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 82 சிறைத்துறை அதிகாரிகளுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக போலீசார் குற்றஞ்சாட்டினர்.
அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, புதுடில்லி துணைநிலை கவர்னரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு கவர்னர் சக்சேனா நேற்று அனுமதி அளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement