”ஜிம்முக்கு நடந்தே போங்களேன்”.. ஐ.நா பொதுச் செயலாளர் உடனான சந்திப்பும் பிரதமரின் பேச்சும்!

குஜராத்தில் பிரதமர் மோடியுடன் ஐ.நா பொதுச்செயலாளர் சந்திந்து பேசியநிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச்செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022-ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்தியப் பயணத்தின் முதல் நாளான நேற்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்குச் சென்று அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.
ஒற்றுமை சிலையில் பிரதமர் மோடி – குட்டெரஸ் சந்திப்பு
குஜராத் சென்ற ஐ.நா.சபை பொதுச்செயலாளர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை, குஜராத் மாநிலம் கேவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் ஒற்றுமை சிலையில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் ஒதுக்குவது, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஐ.நா.பொதுச்செயலாளர் தொடங்கி வைத்தார்.
image
இந்நிகழ்ச்சியில், உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்,
“தனிநபர்களும், சமூகங்களும், நமது பூமியைப் பாதுகாப்பதற்கான தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இது தொடர்பாக, இந்தியா போன்ற நாடுகளுக்கு அர்த்தமுள்ள நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கு வளர்ந்த நாடுகள் தங்கள் உறுதிமொழிகளை பின்பற்ற வேண்டும்.
நாம் ஒரு புதுப்பிக்கத்தக்க புரட்சியை கட்டவிழ்த்துவிட வேண்டும் மற்றும் இதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறோம். காலநிலை தாக்கத்தால் இந்தியாவின் பாதிப்பு மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் ஆகியவற்றால், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வளர்ப்பதில் இந்தியா முக்கியமான பாலமாக அங்கம் வகிக்க முடியும்.
உலகளவில் பசுமை இல்லவாயு வெளியேற்றத்தில் ஜி20 நாடுகள் தான் 80 சதவீதம் பங்களிக்கின்றன. அதேவேளையில், உலகளாவிய ஜிடிபி (உள்நாட்டு உற்பத்தியில், ஜி20 நாடுகள் தான் 80 சதவீதம் பங்களிக்கின்றன. இயற்கைக்கு எதிரானப் போரை முடிவுக்கு கொண்டு வரும் சக்தி ஜி20 நாடுகளுக்கு உள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.
image
இதனைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
பருவநிலை மாற்றத்தை கொள்கை தலையீட்டின் மூலம் சரி செய்து விட முடியும் என்கிற தவறான நம்பிக்கை நிலவுவதாகவும், ஆனால் பருவநிலை மாற்றம் என்பது வெறும் கொள்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல எனவும், சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு குடிமக்களும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஜிம்மு ஏன் காரில் போறீங்க?
பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் அசாதாரணமானது என குறிப்பிட்ட பிரதமர், பனி மலைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்து வருவதோடு, பருவநிலை மாற்றத்தின் இதர பல்வேறு விளைவுகளை இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களும் நன்கு காண்பதாக குறிப்பிட்டார். ஜிம்முக்கு காரில் செல்வதை விட நடந்து செல்வது சிறப்பானது என தெரிவித்த பிரதமர், அதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் மேம்படுவதோடு எரிபொருளும் மிச்சமாகும் என தெரிவித்தார்.
இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட எல்இடி பல்புகள் பொருத்தம் திட்டத்தின் மூலம், சுமார் 100 மில்லியன் டன் அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டதாக கூறிய அவர், தனியார் துறைகளின் பங்களிப்புடன் இந்தியாவில் இதுவரை 107 கோடி எல்.இ.டி. பல்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இயற்கை வழிபடுவது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம்
மறு உபயோகம் மறுசுழற்சி போன்றவை இந்திய பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தின் ஒரு அங்கம் என தெரிவித்த பிரதமர், இந்த பழக்க வழக்கத்தை நாம் மீண்டும் கொண்டு வருவதோடு நிலையான வாய்ப்புகளை உருவாக்க பணியாற்ற வேண்டும் என கூறினார். கடந்த காலத்தில் இருந்து பெரும் கற்றல் மூலம் எதிர்காலத்தை நாம் கட்டமைக்க முடியும் என தெரிவித்த அவர், இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கை வழிபடுவது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம் எனவும் இயற்கையை பாதுகாக்கும் மக்களை இயற்கை பாதுகாக்கிறது என குறிப்பிட்டார்.
– விக்னேஷ்முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.