ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு?; மவுனம் கலைத்த சசிகலா!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆணைய அறிக்கையில் ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா இறந்த நேரத்தில் முரண்பாடு இருப்பதால்

, டாக்டர் சிவகுமார், முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தில், சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலம் தற்போது வெளியாகி பரபரப்பை எகிறவிட்டுள்ளது.

அந்த வாக்குமூலத்தில் சசிகலா கூறி இருப்பதாக வெளியாகி தகவல்கள் பின்வருமாறு:

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மாலை சுமார் 4.20 மணியளவில் ஜெயலலிதா கேட்ட பன், காபியை மருத்துவமனை செவிலியர் டிராலியில் வைத்துக்கொண்டு வந்தார்.

ஜெயலலிதா கட்டிலில் கால் நீட்டியபடி உட்கார்ந்துகொண்டு கண்ணாடி போட்டுக்கொண்டு டிவியில் சீரியல் பார்த்துக்கொண்டே ‘அருகில் வை. சீரியல் முடிஞ்சதும் எடுத்துக்கறேன்’ என்றார். நான் சூடு ஆறிவிடும் என்றேன். கை அசைத்து ‘சற்று பொறு சசி’ என்றார்.

சிறிது நேரத்திலேயே சீரியல் முடிந்ததும் கையில் இருந்த ரிமோட்டை ஜெயலலிதா ஆப் செய்தார். நான் டிராலியை அவருக்கு அருகே வைக்க முயன்றேன். அப்போது ஜெயலலிதாவுக்கு அருகில் ஒரு பெண் மருத்துவரும், செவிலியர் ஒருவரும் நின்று கொண்டு இருந்தனர்.

ஜெயலலிதா இருந்த அறைக்கு வெளியில், டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன் அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென ஜெயலலிதா உடலில் ஒரு பெரிய நடுக்கம் ஏற்பட்டு பல்லை கடித்துக்கொண்டு சத்தம் எழுப்பினார்.

நான் அப்போது ‘அக்கா.. அக்கா’ என கத்த தொடங்கினேன். ஜெயலலிதா என்னை பார்த்துக் கொண்டு தன்னுடைய 2 கைகளையும் உயர தூக்கி என்னை நோக்கி கொண்டு வந்தார்.

நான் கதறி கொண்டே, ஜெயலலிதாவை தாங்கிப் பிடித்தேன். அப்போது ஜெயலலிதா என்னை பார்த்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தார். உடனே மருத்துவர்கள், செவிலியர்கள் தீவிர சிகிச்சை கொடுத்தனர்.

மேலும், சிறப்பு மருத்துவர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். பிறகு, டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தபோது, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.

உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி என்னை வெளியே போக சொல்லிவிட்டனர். நான் கதறியபடி, மயங்கிவிட்டேன். பிறகு, எழுந்து பார்க்கும் போது எக்மோ கருவி பொருத்தப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வந்தது.

எய்ம்ஸ் மருத்துவ குழு, டாக்டர் ரிச்சர்ட் பீலே வழிகாட்டுதலின் படி சிகிச்சை நடைபெற்றது. ஜெயலலிதா எப்படியும் பிழைத்துவிடுவார் என்பதால் சிகிச்சை அளிக்க சொன்னேன்.

ஆனால் டிசம்பர் 5ம் தேதி வரை ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இனியும் முன்னேற்றம் ஏற்படாது என்ற அதிர்ச்சி செய்தியைக்கூறியதும் மீண்டும் நான் மயங்கிவிட்டேன். இவ்வாறு சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எவ்வித விளக்கமும் அளிக்காமல் இருந்த சசிகலா தன்னுடைய மவுனத்தை கலைத்து வாக்குமூலம் அளித்ததாக வெளியாகியிருக்கும் தகவல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.