டீ விற்பவருக்கு எம்.எல்.ஏ சீட்… அமைச்சரை மாற்றி புது வியூகம் வகுத்த பாஜக!

ஹிமாச்சல் பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதாவது 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டி, ஓர் அரசியல் கணக்கை போட்டு வைத்துள்ளது.

இந்நிலையில் சிம்லா நகர்ப்புற சட்டப்பேரவை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட விஷயம் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. ஏனெனில் டீ கடை நடத்தி வரும் சஞ்சய் சூட்டிற்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. அதுவும் தற்போது அமைச்சராக இருக்கும், 4 முறை எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற சுரேஷ் பரத்வாஜை மாற்றி விட்டு களமிறக்கி விட்டுள்ளது.

இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எளிய மனிதர்களை வைத்து தேர்தல் வெற்றிக்கு பாஜக அச்சாரம் போடுகிறதா? என்ற கேள்வி எழுகிறது. தனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்ததை பற்றி சஞ்சய் சூட் கூறுகையில், பாஜகவிற்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மிக முக்கியமான சிம்லா நகர்ப்புற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு சிறு தொழிலாளியான எனக்கு இதெல்லாம் மிகப்பெரிய விஷயம் மற்றும் மரியாதை. பாஜக உடன் இணைந்து செயல்படுவதில் மிகவும் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். சஞ்சய் சூட் பின்னணி குறித்து விசாரிக்கையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் சிறு வயது முதலே தொடர்பில் இருந்திருக்கிறார். இவருக்கு கல்வியும், கலாச்சாரம் பற்றிய புரிதலும் அளித்ததே ஆர்.எஸ்.எஸ் தானாம்.

கல்லூரி கட்டணம் செலுத்த பேப்பர் போடும் வேலையை செய்து வந்துள்ளார். அப்போது தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 5 ஆண்டுகள் செயல்பட்ட நிலையில் குடும்பத்தின் பொருளாதார சிக்கல் காரணமாக அதை விட்டு வெளியே வந்துள்ளார்.

பின்னர் மருத்துவ பிரதிநிதியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 1991ல் டீ கடையை தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். இவருக்கு பெரிதான அரசியல் பின்புலம் இல்லை. ஆர்.எஸ்.எஸ் போட்ட விதை தான், பாஜகவில் தற்போது ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது. இந்த வியூகம் சட்டப்பேரவை தேர்தலில் எந்தளவிற்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.