மதுரை: தஞ்சை பெரிய கோயில் பிரகாரத்தில் உள்ள இந்திரன் கோயிலை திறக்கக்கோரிய வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கூரியூரைச் சேர்ந்த அழகர்சாமி பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தஞ்சை பெருவுடையார் கோயில் பிரகாரத்தில் 11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்திரன் கோயில் அமைந்துள்ளது. ஆனால், அந்தக்கோயில் பொதுமக்களின் வழிபாட்டிற்கு இதுவரை திறக்கவில்லை. சங்க காலம் முதல் இந்திரன் வழிபாடு முறை உள்ளது. ஆனால், இந்திரன் கோயிலில் வழிபாடும், பூசைகளும் நடக்கவில்லை.
இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை மீறும்செயலாகும். எனவே, நீதிமன்றம் தலையிட்டு பெருவுடையார் கோயிலில் அமைந்துள்ள இந்திரன் கோயிலை மக்கள் வழிபாட்டிற்கு திறக்கவும், சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட இந்திர விழாவை நடத்தவும் உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு, இதேபோன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியிலிட உத்தரவிட்டு விசாரணையை நவ.1க்கு தள்ளி வைத்தது.