அண்மையில் பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டமான தஞ்சை மாவட்டத்தில், விவசாய நெற்பயிர்கள் பெருத்த சேதமடைந்தன.
பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக ஏழு கிராமங்களில் பயன் பெற இயலாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக, பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக எம்எல்ஏவும், அரசு தலைமை கொறடாவுமான கோவி. செழியன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில், தஞ்சாவூர் மாவட்டம், விவசாய பெருமக்களின் பயிர் காப்பீடு திட்டத்தில் 788 கிராமங்கள் உள்ளன. தற்போது 7 கிராமங்களுக்கு ரூ.38.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாய பெருமக்கள் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.
விவசாய பெருமக்களின் துயர் நீக்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டத்தில் கூடுதல்) நிதி ஒதுக்கீடு செய்து விவசாய பெருமக்களுக்கு உதவிடுமாறு தமிழக முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அந்த மனுவில் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.