இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை மற்றும் தரக்கட்டுப்பாடு உள்ளிட்டவை யுஜிசியின் முதன்மைப் பணிகள் ஆகும். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான அனுமதிகளை வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளைச் செய்வதற்கும் இந்த அமைப்புக்கே அதிகாரம் உள்ளது.
மேலும், உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் பணியையும் இந்த அமைப்பு செய்து வருகிறது. இந்நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில்,
“இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதனை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை அளவில் சைபர் பாதுகாப்பு பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இந்த பாடத்திட்டமானது அதிக விழிப்புணர்வு, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது