பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள உத்வந்த்நகரைச் சேர்ந்த மாணவன் தயா குமார். 12 வயதான தயா குமார் அங்குள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவன் உறவின் முறையில் சகோதரி ஒருவர், வேறொரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த வகையில், தயா குமாரின் சகோதரிக்கு அரையாண்டு தேர்வு கடந்த அக். 13ஆம் தேதி நடந்துள்ளது. இந்த தேர்வில், அவரின் சகோதரி வெல்ல வேண்டும் என்பதற்காக, பிட்டு தாள்களை தயா குமார் தேர்வறைக்கு மறைமுகமாக எடுத்துச்சென்றுள்ளார்.
கொண்டுவந்த பிட்டு தாளை ஜன்னலுக்கு வெளியே இருந்து, சகோதரியிடம் எறிந்துள்ளார். ஆனால், அது மற்றொரு மாணவி அருகே சென்று விழுந்துள்ளது. இதை பார்த்த அந்த மாணவி, அந்த பிட்டு தாளை, காதல் கடிதம் என தவறாக நினைத்துள்ளது. தொடர்ந்து, தயா குமார் தனக்கு காதல் கடிதம் கொடுத்ததாக், அந்த மாணவி தனது பெற்றோரிடமும், உறவினர்களிடம் கூறியுள்ளது.
இதையடுத்து, அந்த 12 வயது மாணவனின் உடல் அருகில் இருந்த ரயில் தண்டவளாத்தில் சிதைந்த நிலையில் கடந்த அக். 17ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில், அந்த மாணவியின் அண்ணன் அந்த மாணவனை கடுமையாக தாக்கி, கடத்திச்சென்றதாக பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினர் புகார் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இதையடுத்து, அந்த கொலைக்கு தொடர்புடைய மாணவியின் குடும்பத்தினர் ஒன்பது பேரை போலீசார் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் நால்வர் 18 வயதிற்கும் குறைவானர்கள் என்பதால், அவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.