புதுடில்லி, ”தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடித்தால் அபராதம் மட்டுமின்றி, ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்,” என, புதுடில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறினார்.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுடில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது:
சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க, இந்த ஆண்டும் செப்., முதல் ஜன., 1 வரை தலைநகர் புதுடில்லியில் பட்டாசு விற்க, வாங்க மற்றும் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்காணிக்க, பல்வேறு துறைகள் சார்பில் 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடையை மீறுவோருக்கு 200 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
‘தீபாவளி பண்டிகை என்பது விளக்குகளின் திருவிழா; பட்டாசு வெடிப்பது அல்ல’ என்ற பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு சார்பில், கன்னாட் பிளேசில் நாளை 51 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்படும்.
கடந்த 16ம் தேதி வரை புதுடில்லியில் 2,917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement