பேரறிஞர் அண்ணா முட்டாள்… பத்ரி சேஷாத்ரி போட்ட ட்வீட் – ஒரே இரவில் தூக்கியடித்த அரசு!

கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகத்தின் மூலம் பல புத்தகங்களை வெளியிடுபவர் பத்ரி சேஷாத்ரி. பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர். வலதுசாரி சிந்தனையுடையவர் என்ற பார்வை பலருக்கு இவர் மீது உண்டு. இப்படிப்பட்ட சூழலில் அவர் தமிழ்நாடு இணைய கல்வி கழக ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றார். அப்போதே பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் பி.எஸ். நிசிம் என்பவர் ‘பிரம்மாஸ்திரா’ என்ற இந்தி திரைப்படத்தை மேற்கோள் காட்டி மாயாஜாலம் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்டவைகளுக்கு இந்தியில் சரியான சொற்கள் இல்லை என ட்விட்டரில் கூறியிருந்தார்.  இதனை ரீட்வீட் செய்த வினோத்குமார் என்ற பத்திரிகையாளர், “அதனால்தான் நமது முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை, மூன்று மாதங்களில் இந்தி மொழியைக் கற்கலாம், அதற்குப் பிறகு அந்த மொழியிலிருந்து கற்க ஒன்றுமில்லை என்றார்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டை பார்த்த பத்ரி அதனை ரீட்வீட் செய்து, “என்ன ஒரு அபத்தமான கூற்று! சி.என்.அண்ணாதுரை இந்தக் கருத்தைச் சொல்லியிருந்தால், அவரையும் முட்டாள் என்றே சொல்ல வேண்டும்” என பதிவிட்டிருந்தார். அவரது இந்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து திமுக எம்.பி. செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பேரறிஞர் அண்ணாவை பத்ரி சேஷாத்ரி அவமானப்படுத்தி பேசியது கண்டனத்துக்குரியது. இத்தகைய ஆட்களுக்கு குழுக்களில் (தமிழ்நாடு இணைய கல்வி ஆலோசனை குழு)  இடம் அளிப்பது அண்ணா மேல் மரியாதை வைத்திருக்கும் கழக சுயமரியாதை தொண்டர்களுக்கு வேதனை அளிக்கிறது” என நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி. தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் இருந்து பத்ரி நீக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்து அதற்கான நகலையும் பகிர்ந்திருந்தார். இதனைக் கண்ட பத்ரி, இதுதான் அண்ணாவின் வெற்றியா என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு செந்தில்குமார், ஆம் இது கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களின் வெற்றி என பதிலடி கொடுத்தார். தற்போது இந்த விவகாரம் ட்விட்டரில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

முன்னதாக, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், ஆங்கிலம் மிகவும் அவசியமான இடங்களில் மட்டுமே பயிற்றுவிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அந்த நிறுவனங்களில் படிப்படியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை மாற்றாக கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.