மதுரை: மீனாட்சியம்மன் கோயில் அருகே முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த ரூ.48 கோடியில் கட்டிய ‘பல்லடுக்கு வாகன காப்பகம்’ தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால், தீபாவளி ஷாப்பிங்கிற்கும், பண்டிகை கால பூஜைகளுக்கு கோயிலுக்கு வருவோரும் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ததத்தளிக்கின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கும், அதனை சுற்றியுள்ள மாசி வீதிகளில் ஷாப்பிங் செய்ய வருவோருக்கும் பார்க்கிங் வசதி முற்றிலும் இல்லை. மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், ஆவனி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் உள்ளன. இந்த வீதிகளில் கார்ப்பரேட் ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள் முதல் சிறு குறு வியாபாரிகள் நடத்தும் சிறு தொழில் நிறுவனங்கள் உள்பட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளுக்கு தினமும் லட்சக்கணக்கானோர் பொருட்கள் வாங்க வந்து செல்கிறார்கள். மீனாட்சியம்மன் கோயிலுக்கு சுற்றுலாவுக்கும், வழிபாட்டிற்கும் தினமும் 40 ஆயிரம் பேர் வருகிறார்கள். விழா காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பார்க்கிங் வசதி இல்லை. அப்படியே இருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலே வாகனங்களை நிறுத்துவதற்கு இட வசதி உள்ளது. பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கிய இடங்களையும் குடோனாக அந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
அதனால், அந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நடுரோட்டில் ஒரு புறமாக பார்க்கிங் செய்து செல்கிறார்கள். அவர்களை மாநகராட்சியாலும், போக்குவரத்து போலீஸாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், ஆட்டோக்காரர்கள் கூட, சவாரிக்கு மீனாட்சியம்மன் வீதிகள் என்றாலே தலைதெரிக்க ஓடுகிறார்கள். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் அகலப்படுத்தப்பட்டு புதிதாக போடப்பட்டன. மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வடக்கு ஆவணி மூல வீதியில் மீனாட்சியம்மன் கோயில் அருகே மாநகராட்சி ரூ.48 கோடியில் பல்லடுக்கு வாகன காப்பகம் கட்டியது.
கடந்த சில வாரம் முன் இந்த பல்லடக்கு வாகன காப்பகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். ஆனால், முதல்வர் திறந்து வைத்தும் தற்போது வரை இந்த பல்லடுக்கு வாகன காப்பகம் திறக்கப்படவில்லை. தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் இருந்து ஜவுளி எடுக்கவும், பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்கள் மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் குவிந்துள்ளனர்.
நடக்க கூட முடியாத அளவிற்கு இந்த வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதுபோல், அவர்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது கார்களில் வந்து செல்கிறார்கள். ஆனால், கடைகளில் பார்க்கிங் வசதி இல்லமல் தடுமாறுகின்றனர். தீபாவளி பண்டிகை நேரத்தில் முதல்வர் திறந்த பல்லடுக்கு வாகன காப்பகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு மாநகராட்சி திறந்து வைத்திருக்கலாம். ஆனால், மாநகராட்சி வணிக நோக்கத்தில் இந்த காப்பகத்தை டெண்டர் விடாமல் திறக்க மாட்டோம் என பூட்டி வைத்துள்ளனர்.
தற்போது தீபாவளி முடிந்ததும் அடுத்து முகூர்த்த நாட்கள் வருகிறது. அதனை தொடர்ந்து காரத்திகை மாதம் என்பதால் சபரிமலை பக்தர்கள் ஆயிரக்கணகானோர் மீனாட்சியம்மன் கோயிலுக்கு தினமும் வருவார்கள். அவர்கள் நிறுத்துவதற்கு வாகன காப்பகம் இல்லாமல் சாலைகளில் பார்க்கிங் செய்வதால் நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், முதல்வர் திறந்து வைத்த மீனாட்சியம்மன் கோயில் பல்லடுக்கு வாகன காப்பகத்தை உடனடியாக திறக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”அடுத்து வரும் கூட்டத்தில் இந்த பல்லடுக்கு வாகன காப்பகத்தை டெண்டர் விடுவதற்கு தீர்மானம் வைத்துள்ளோம். டெண்டர் விட்ட பிறகே திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 மணி நேரத்திற்கு கார் நிறுத்த ரூ.40, இரு சக்கர வாகனங்களை நிறுத்த ரூ.30 கட்டணம் நிர்ணயிக்க ஆலோக்கிறோம்,” என்றார்.