மதுரை: மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை தமிழில் மொழி பெயர்க்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நாடு முழுவதும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கு இந்தி மொழியில் பெயர் சூட்டப்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படும் போது தமிழக அரசின் விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் திட்டத்தின் பெயரை இந்தி மொழில் இருப்பது அப்படியே தமிழில் குறிப்பிடப்படுகின்றன.
குறிப்பாக பிரதான் மந்திரி முந்த்ரா யோஜனா திட்டத்தை அப்படியே தமிழில் குறிப்பிட்டால் தமிழர்களுக்கு திட்டம் புரியாது. ரயில்களில் பெயர்கள் வைகை, பல்லவன், பாண்டியன், பொதிகை என முன்பு பெயர் வைக்கப்பட்டது. தற்போது அந்தோதையா, தேஜஸ், டோரன்டோ மற்றும் சுவேதா எக்ஸ்பிரஸ் என ரயில்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றன. எனவே, தமிழகத்தில் அமலில் இருந்து வரும், வரப்போகும் மத்திய அரசின் திட்டங்களுக்கான பெயரை தமிழில் மொழி பெயர்த்து குறிப்பிடவும், ரயில்களுக்கு முன்பிருந்தது போல் அழகிய தமிழ் பெயர்களை சூட்டவும் உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழ்நாடு முதன்மை செயலர், தமிழ் வளர்ச்சித் துறை செயலர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.