மும்பை, ‘அனைவரையும் அரவணைப்பது, மனித உரிமைகள் மதிக்கப்படுவது உறுதி செய்யும்பட்சத்தில், உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு முழு அங்கீகாரம் கிடைக்கும்’ என, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் பேசினார்.
இந்தியா வந்துள்ள, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ், மும்பை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
மனித உரிமை கவுன்சிலின் உறுப்பினராக உள்ள இந்தியாவுக்கு, உலகளவில் மனித உரிமையை வடிவமைக்கும் பொறுப்பு உள்ளது.
அனைத்து தரப்பு மக்களையும், சிறுபான்மையினரையும் ஒருங்கே அரவணைத்து செல்ல வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதும், பலதரப்பட்ட மக்கள் வாழ்வதும் இந்தியாவின் பலமாகும். இங்கு அனைவருக்கும் மனித உரிமை என்பது பிறப்பால் கிடைத்துள்ள உரிமையாகும்.
ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை. அதை வலுப்படுத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும்.
அனைவரையும் அரவணைத்து, மனித உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யும்போது, உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு அங்கீகாரம், அத்தாட்சி கிடைக்கும்.
அனைத்து தரப்பு மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர் சம உரிமையுடன், கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற மஹாத்மா காந்தியின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
பலதரப்பட்ட கலாசாரம், பல தரப்பட்ட மதங்கள், பாரம்பரிய சமூகங்களின் பங்களிப்பை மதிப்பதுடன், வெறுப்பு பேச்சுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பாதுகாக்கப்படுவதுடன், சுதந்திரமான நீதித் துறையையும் உறுதி செய்ய வேண்டும்.
இவை கடைப்பிடிக்கப்படுவதால் தான் இந்தியாவை உலக நாடுகள் கொண்டாடுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்