மாநகருக்கு அழகு சேர்க்கும் `தூத்துக்குடி செல்பி பாயின்ட்’ விரைவில் திறக்க ஏற்பாடு: ஆய்வுக்கு பின்னர் மேயர் ஜெகன் தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகருக்கு அழகுசேர்க்கும் வகையில் அமைக்கப்படும் நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்ட் பணிகள் நிறைவுபெற்று விரைவில் திறக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி  மேம்பாலம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நம்ம தூத்துக்குடி என்ற செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டு பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை மேயர் ஜெகன் பெரியசாமி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:  தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சமின்றி அனைவருக்கும் தேவையான அடிப்படை பணிகளை செய்து கொடுப்பது எங்களது கடமை என்ற கடமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம்.

நான்கு வழிகளிலும் கட்டமைப்பு வசதியுள்ள மாநகர் துறைமுகம் மூலம் பல்வேறு ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் பெரிய துறைமுகம் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த துறைமுக மாநகர மக்களுக்கு புதுமையான திட்டங்களை செயல்படுத்தும் விதமாக 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவது, நெகிழிகளை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். தூய்மையான நகரமாகவும் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வெளிநாட்டிலிருந்து வரும் தொழில் நிறுவனங்களை கவரும் வகையில் இதுபோன்ற பணிகளை முறைப்படுத்தி செய்து வருகிறோம்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என்ற லட்சியத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தோடு பணியாற்றும் எங்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இந்த செல்பி பாயின்ட் விரைவில் பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். ஆய்வின் போது அண்ணாநகர் பகுதி திமுக செயலாளர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் செந்தில்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் ஜோஸ்பர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.