பிரபல குணசித்திர நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2001ஆம் ஆண்டில், இயக்குநர் தரணி இயக்கி, விக்ரம் நடிப்பில் வெளியான,’தில்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர், ரஜினியின் ‘பாபா’ திரைப்படத்தில் இப்போ ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார். இதையடுத்து, ஏழுமலை, பகவதி, தமிழன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பரிட்சயமானார்.
தொடர்ந்து, தரணி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கில்லி’ திரைப்படத்தில் நடிகர் விஜய்-க்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், அனைவரின் மனதிலும் நீங்காத இடம்பிடித்தார். அதற்கு பிறகும் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வந்தார்.
படங்களில் நடிப்பதை குறைத்துள்ள ஆஷிஷ், தற்போது இன்ஸ்டாகிராம், யூ-ட்யூபில் படு பிசியாக இருந்து வருகிறார். உணவு குறித்து அவர் போடும் வீடியோக்கள், போஸ்ட்கள் ஏராளமான பார்வையாளர்களை கொண்டிருக்கிறது. நடனமாடி அவர் போடும் இன்ஸ்டா ரீல்ஸ்களும் பல லைக்குகளை குவித்து வந்தன.
இந்நிலையில், தற்போது மீண்டும் அவர் வைரலாகியுள்ளார். ஆனால், இம்முறை விமானத்தில் அவர் செய்த குறும்புத்தனமான செயலால் பேசுபொருளாகி உள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராமில் அக். 17ஆம் தேதி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சண்டிகருக்கு சென்றபோது, அவர் சென்ற விமானத்தில் பெண் ஒருவர் அவரை எங்கையோ பார்த்தது போல் இருக்கிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து யோசித்து பார்த்தும் ஏதோ படத்தில் பார்த்ததுபோல் தான் உள்ளது என குழப்பமாக தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆஷிஷ், நான் படங்களில் எல்லாம் நடித்தது இல்லை. என மர வியாபாரம் செய்கிறேன். என்னை மார்க்கெட்டில் எங்காவது பார்த்திருப்பீர்கள்” என நகைச்சுவையாக கூறினார். இன்ஸ்டாகிராமில் 59 வினாடிகளுக்கு அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோ 1.18 லட்சம் லைக்குகளை தாண்டி சென்றுள்ளது.
மேலும் இந்த வேடிக்கையான சம்பவத்தின் முழு வீடியோவையும், யூ-ட்யூபில் பதிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒருவர்,”இவர் ரொம்ப கியூட்டாக இருக்கிறார். பணிவாக பயணம் செய்வது, அனைத்தையும் சாப்பிடுவது என இவரை தொடர்ந்து பார்த்து வருகிறேன். எனது சின்ன வயதில் இருந்து பல படங்களிலும் இவரை பார்த்திருக்கிறேன். மனிதர்கள் வயதாக வயதாக மிகவும் கியூட்டாக மாறுகின்றனர். உங்களுக்கு எனது அன்பும், மரியாதையும்…” என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். தற்போது, ஆஷிஷ் வித்யார்த்திக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.