கர்நாடகாவில் கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. உலக நாடுகள் பலவும், மாணவிகளுக்கு ஆதரவாகக் கருத்துகளைக் கூறிய நிலையில் நாடு முழுவதும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் உடுப்பி பி.யூ. கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பலர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 31-ம் தேதி வழக்குத் தொடுத்தனர். இதை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் பல்வேறு தரப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

கடந்த மார்ச் 15-ம் தேதி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “கர்நாடகாவில் அனைத்து கல்வி நிலையங்களிலும் சீருடையைக் கடைப்பிடிக்கும் விதமாக ஹிஜாப் தடை செய்யப்பட வேண்டும். இதை மீறினால் கல்வி நிலையங்களில் அனுமதி இல்லை” என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி, ஹிஜாப் வழக்கில் நீதிபதி சுதான்ஷூ துலியா “கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஏற்கெனவே பெண் குழந்தைகள் பல சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். இந்த வழக்கில் முடிவெடுப்பதற்கு முன், நாம் பெண்களின் வாழ்வை மேம்படுத்தி உள்ளோமா? ” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். ஹிஜாப் தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், அடுத்து இந்த வழக்கின் நிலை என்ன என்பது பற்றி வழக்கறிஞர் அருள்மொழியிடம் பேசினோம்.
அவர் கூறுகையில், “இரு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு, கூடுதல் நீதிபதிகள் முன்பு வாதாடப்படும். அதில் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்னவோ, அதுவே இறுதித் தீர்ப்பாக வழங்கப்படும். இதற்கு முன்பு சென்னையில், ‘குழந்தைகள் நலம் சார்ந்த வழக்குகளை ஏன் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்… இதனால் நீதிமன்ற நேரம் வீணாகிறது… எனவே இத்தகைய வழக்குகளை குடும்ப நல நீதிமன்றங்களே விசாரிக்கலாம்’ என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தீர்ப்பு கூறினார். ஆனால், சட்டத்தில் குழந்தைகள் நலம் சார்ந்த வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். நீதிபதியுடைய தீர்ப்பு என்பது அவருடைய கருத்து. இந்நிலையில், கூடுதல் நீதிபதிகள் முன்பு சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு வாதாடப்பட்டு, உயர்நீதிமன்றமும் குழந்தைகள் நலம் சார்ந்த வழக்குகளை விசாரிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதுபோல, ஹிஜாப் வழக்கிலும் ஹிஜாப் அணிவது சரியா, தவறா.. ஹிஜாப் அணிவது உரிமையா, இல்லையா… ஹிஜாப் அணிவது கல்வி நிலையங்களில் சீரான தன்மையை பாதிக்குமா.. என்பதான கேள்விகளை 5 நீதிபதிகள் கொண்ட பேராயம் ஆய்வு செய்யும். கல்வி நிலையங்கள் வழங்கிய சீருடையைத் தாண்டி சந்தனம், பொட்டு, பூ, மை, பூணூல், ருத்ராட்சம் என எது அணிந்தாலும் அது சீருடை அல்ல. சந்தனம், பொட்டு, இவற்றை அழகுக்காகப் பயன்படுத்துகிறோம் என்றால், அவர்களைப் பொறுத்தவரையில் ஹிஜாப் கூட அவர்கள் அழகுக்காக அணிந்திருக்கலாமே! சந்தனம், பொட்டு.. இவற்றை எடுத்துக் கொண்டால் இதில் அழகு மட்டும் தானா, இல்லை மதமும் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அழகு, மதம், பண்பாடு என என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சீருடையைத் தாண்டியவை விதிமீறல்தான். அப்படி இருக்க, நீங்கள் பொட்டு வைத்துக் கொள்ளலாம், திருநீறு பூசிக் கொள்ளலாம். ஆனால் ஹிஜாப் மட்டும் அணிந்து வரக் கூடாது. அது சீரை பாதிக்கிறது என்று சொல்வது தவறு.
அரசு, குழந்தைகளை கல்வி நிலையங்களில் எப்படியேனும் கல்வி கற்க வரவைக்க வேண்டுமே தவிர, அவர்களை கல்வி நிலையங்களில் இருந்து விரட்டும் வேலையைச் செய்யக் கூடாது. அப்படி அக்கறையோடு வழங்கப்பட்ட தீர்ப்பையே மக்கள் நலன் கருதி ஆட்சி நடத்துகின்ற யாரும் ஏற்றுக் கொள்வார்கள்.

நாங்கள் ஆட்சி நடத்துவதே எங்கள் மதத்தை வளர்க்கத் தான் என்று நினைக்கிறவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களை கல்வி, பொதுவெளி, வணிகம் , வாழ்வாதாரம் என்று விலக்கி வைக்கிறார்கள். தன் குடிமக்களையே பாகுபடுத்தி விலக்கி வைக்கிறவர்கள், அந்த எண்ணம் படைத்தவர்கள் ஆட்சியிலிருந்தால் அவர்கள் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம்” என்றார்.