கரிம்கஞ்ச் (அசாம்): அசாம் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மக்கள் அனைவரும் சமஸ்கிருத மொழிக்கு மாறி இருக்கின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் தொகையில் முதலிடத்திலும், நிலப்பரப்பில் இரண்டாவது இடத்திலும் இருக்கும் மாநிலம் அசாம். இங்குள்ள மக்களின் தாய்மொழி அசாமி. அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாட்டியாலா என்ற கிராமம்தான் தற்போது சமஸ்கிருதத்திற்கு மாறி இருக்கிறது.
பாட்டியாலா கிராமத்தில் 60 குடும்பங்கள் உள்ளன. சுமார் 300 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த தீப் நாத் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது கிராமத்தில் யோகா பயிற்சி மையம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். 2015-ம் ஆண்டு இந்த கிராமத்திற்கு வந்த சமஸ்கிருத பாரதி அமைப்பினர், இவரது ஒத்துழைப்புடன் கிராம மக்களுக்கு சமஸ்கிருதத்தை கற்றுத் தர தொடங்கி உள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமஸ்கிருதத்தை ஆர்வமுடன் கற்கத் தொடங்கி உள்ளனர். சமஸ்கிருதம் மீதான ஈர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, அவர்கள் சமஸ்கிருதத்திலேயே தங்களுக்குள் உரையாடத் தொடங்கி இருக்கின்றனர்.
இந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது கிராம மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்திலேயே உரையாடி வருவதாகக் கூறுகிறார் தீப் நாத். புராதனமான சமஸ்கிருத மொழி, தற்போது தங்களுக்கான தொடர்புமொழியாகவும் மாறி இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். சமஸ்கிருதம் கற்ற பெரியவர்கள், தங்கள் குழந்தைகளும் சமஸ்கிருதம் கற்க ஊக்குவித்து வருவதாக அவர் கூறுகிறார்.
தங்கள் கிராமத்தில் தினமும் காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதாகவும், இந்த பயிற்சி வகுப்பு முழுக்க முழுக்க சமஸ்கிருத்திலேயே நடப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். தங்கள் கிராமத்தில் மக்கள் அனைவரும் சமஸ்கிருதத்தில் பேசுவதைப் பார்த்து பக்கத்து கிராமமான அனிபூரில் உள்ள மக்களும் தற்போது சமஸ்கிருதத்தில் பேசத் தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கிறார் தீப் நாத். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம் என்பது குறிப்பிடத்தக்கது.