அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் ஓடைகளில் உடைப்பு: விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் நாசம்; மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை அவசியம்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான குளம், ஏரி, கண்மாய்கள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தேங்கும் பாசனநீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளன. இந்த கண்மாய்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களை மீட்க வேண்டும் என விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினர்.

அதேபோல பல கண்மாய்களில் முறையான குடிமராமத்து பணிகளும் நடக்கவில்லை என புகார்கள் எழுந்தன. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே, பொதுப்பணிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு கண்மாய்கள் மீட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்மாய்களை மீட்க தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு ெகாண்டிருக்கிறது. இந்நிலையில்,கடந்த அதிமுக ஆட்சியின் அலட்சியபோக்கால் தற்போது பெய்து வரும் பருவமழையால் ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கிராமங்கள் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் 100க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் உள்ளன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆண்டிபட்டி சுற்றியுள்ள பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, பாலக்கோம்பை, அணைக்கரைப்பட்டி, புள்ளிமான்கோம்பை, ரெங்கசமுத்திரம், நாச்சியார்புரம், முத்தனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கத்தரி வெண்டை, தக்காளி, முருங்கை, வாழை மற்றும் பூ வகைகளில் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட பல்வேறு பூ ரகங்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தவிர மானாவாரிய பயிர் சாகுபடி முக்கிய பங்களிக்கிறது.

இந்தப் பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த பகுதியில் ஆசாரிப்பட்டி கண்மாய், கன்னியப்பபிள்ளைபட்டி, வரதராஜபுரம் கண்மாய், அதிகாரி கண்மாய், செங்குளம், கருங்குளம் கண்மாய், மும்மூர்த்தி கண்மாய், தெப்பம்பட்டி கண்மாய், கோவில்பட்டி கண்மாய், ஜம்புலிபுத்தூர் கண்மாய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. ஆண்டிபட்டி ஒன்றியப் பகுதியில் ஏராளமான கண்மாய்கள் இருந்தாலும் கண்மாய் பாசனம் செய்ய முடியாமல் கிணற்றுப் பாசனம் செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்தது. ஆனாலும் ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் உள்ள கண்மாய்களில் அதிகளவு நீர்வரத்து ஏற்படவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை மாவட்டத்தில் பெய்ய தொடங்கியுள்ளது. இதில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாயிலிலும் குளங்களிலும் ஓடைகளிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்பை விட அதிக அளவு பெய்து கொண்டிருப்பதால் சிறு ஓடைகளில் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நாச்சியார்புரம் கிராமத்தின் வழியாக பாலோடை என்ற சிறு ஓடை உள்ளது. இந்த ஓடை கரிசல்பட்டி பின்புறம் வழியாக சென்று நாச்சியார்புரம், ரெங்கசமுத்திரம், அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டியில் 58ம் கால்வாயில் கலக்கிறது. இந்த ஓடை ஆக்கிரமிப்பில் உள்ளது. 40 முதல் 60 அடி வரை உள்ள இந்த ஓடை தற்போது 20 அடி முதல் 30 அடி வரை தான் உள்ளது. மேலும் ஓடைகள் தூர்வாராமல் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அனைத்து ஓடைகளிலும், கண்மாய்களிலும் நீர்வரத்து ஏற்பட்டது. இதேபோல் இந்த பாலோடை ஓடை பகுதியிலும் அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டது. அதிக நீர்வரத்தால் நாச்சியார்புரம் பகுதியில் உள்ள ஓடையில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் அதிகளவு தண்ணீர் வெளியேறி விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்தது. ஓடையை சுற்றி சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் முழ்கி சேதமடைந்து. பிராதுகாரன்பட்டி பகுதியில் உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்தது. அப்பகுதியில் உள்ள போஸ் என்ற விவசாயின் நிலத்தில் பயிரிட்ட மல்லிகை செடிகள், மாடுகளுக்கான பசுந்தீவனம், தென்னை போன்ற பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது. 2 நாட்களாக இந்த மழைநீர் வடியாததால் பயிர்கள் அழுக தொடங்கிவிட்டன. மேலும் அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடியாமல் உள்ளதால் மேலும் பயிர் பாதிப்பு மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ் என்பவர் கூறுகையில், நாச்சியார்புரம் கிராமத்தில் பாலோடை ஓடையில் உடைந்ததால் தண்ணீர் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டது. நாச்சியார்புரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் கிராம மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே, மழைநீரை வெளியேற்ற வழி ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓடையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றனர்.

கடந்த ஆட்சியால் ஒரே கஷ்டமப்பா…
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஆறுகள் முறையாக தூர்வாரப்பட்டு மராமத்துப் பணிகள் செய்யப்படாததால் பல இடங்களில் நீர்நிலைகள் கருவேலம் மரங்கள், புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால், மழைக்காலங்களில் நீரை தேக்க முடியாமல் மழைநீர் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவது தொடர்கிறது. மேலும், கண்மாய் கரைகளை முறையாக பலப்படுத்தி, உயர்த்தாமல் விட்டதால் கரைகள் உடைந்து மழைநீர் வெளியேறி வீணாகி வருகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.