அந்தியூரில் பரபரப்பு மது போதையில் ரோட்டில் படுத்து பெண் திடீர் ரகளை: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார்

அந்தியூர்: மதுபாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவதாக கூறி,  போதையில் ரோட்டில் படுத்து பெண் ரகளையில் ஈடுபட்டதால் அந்தியூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர்- அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரோட்டின் நடுவே படுத்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் ஏதேனும் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதோ என பயந்து அருகில் சென்று பார்த்தபோது அந்த பெண் மது போதையில் ரோட்டில் படுத்து கூச்சல் போட்டது தெரிய வந்தது. அப்பகுதி மக்கள், அவரை பிடித்து ரோட்டின் ஓரமாக கொண்டுவந்து விட்டாலும் மீண்டும் மீண்டும் ரோட்டின் நடுவே வந்து படுத்துக்கொண்டு, ‘‘அந்தியூர் பகுதி டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய், 15 ரூபாய் அதிகம் வாங்குகிறார்கள்.

அதனால் மது வாங்குவதற்கு என்னிடம் ரூ.10 குறைவாக உள்ளது. ஒவ்வொரு முறையும் மது கடைக்கு வரும் மற்றவர்களிடம் பணம் கேட்டு வாங்கி மது குடிப்பது சிரமமாக உள்ளது. எனவே மது பாட்டில்களை நியாயமான விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இது குறித்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை சாலையைவிட்டு ஓரமாக அழைத்து வந்து உணவு வாங்கிக் கொடுத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் தவிட்டுப்பாளையம் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.