அருணாச்சலில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் உடல்கள் மீட்பு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளான சம்பவத்தில், இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு சியங் மாவட்டம் டியூட்டின் என்ற பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் மேற்கொண்டிருந்தது. காலை 10.43 மணியளவில் மலைப்பாங்கான பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். விபத்து நடந்த மலைப் பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஹெலிகாப்டர் மூலமும், வனப்பகுதி வழியாகவும் மீட்புக் குழுவினர் விரைந்தனர்.

இந்நிலையில், ஹெலிகாப்டரில் 5 பேர் பயணித்ததாகவும், அதில் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.