கவுகாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. தேடுதல் பணி நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்கான சாலை வசதிகள் எதுவும் இல்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. தகவல்களின்படி, மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) சிங்கிங் கிராமத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் இது. தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
சிங்கிங் கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
“அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் இந்திய ராணுவத்தின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து மிகவும் கவலையளிக்கும் செய்தி கிடைத்தது. எனது ஆழ்ந்த பிரார்த்தனைகள்” என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Received very disturbing news about Indian Army’s Advanced Light Helicopter crash in Upper Siang District in Arunachal Pradesh. My deepest prayers pic.twitter.com/MNdxtI7ZRq
— Kiren Rijiju (@KirenRijiju) October 21, 2022
விபத்து நடந்த இடத்திற்கு சாலை வசதி இல்லை என்றாலும், மீட்புக் குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மேல் சியாங் மூத்த காவலர் ஜும்மர் பாசார் கூறினார் என்று ANI செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தை அணுக, ஒரு தொங்கு பாலத்தைத் தவிர, சாலைகள் எதுவும் இல்லாததால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் பணிகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. உள்ளூர் கிராம மக்களும் மீட்பு நடவடிக்கையில் ராணுவத்தினருடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் அருணாச்சல பிரதேசத்தில் நடந்த இரண்டாவது ஹெலிகாப்டர் விபத்து இதுவாகும். இந்த மாத தொடக்கத்தில், தவாங் அருகே சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இதைத்தவிர, கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த 6 பக்தர்களும், விமானியும் பலியானார்கள். மோசமான வானிலை காரணமாக, இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.