“ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அரசியல்வாதி தயாரித்தது போன்று உள்ளது. இதனை சி.பி.ஐ விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும். இதில் அரசியல் இருக்கிறது” என தஞ்சாவூரில் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.

அ.ம.மு.க-வின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் ராஜ்மோகன் மறைவையொட்டி தஞ்சாவூரில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன், “சட்டமன்றத்தில் எதையும் முடிவு செய்கிற அதிகாரம் சபாநாயகருக்குத்தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமி கம்பெனிக்கும் அது தெரியும்.
மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும் நிலையில், நாற்காலிக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது ஒரு அரசியல்வாதியாக எனக்கு வருத்தமளிக்கிறது. நான் ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த போது எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். எனக்கு முன்னிருக்கையில் சீட் வேண்டும் என கேட்டேன். அதற்கான முடிவு எடுக்காமலேயே நான்கரை வருடங்கள் முடிந்து விட்டது. முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்குத்தான் உள்ளது அதில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது என தெரிந்தும் எனர்ஜியை வேஸ்ட் செய்திருக்கின்றனர்.

துாத்துக்குடி சம்பவம் நடந்தபோது பழனிசாமிதான் முதல்வராக இருந்தார். அவர் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். நிச்சயமாக தமிழ்நாடு அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கும். 13 பேரை குருவியை போல் சுட்டு கொன்றதற்கு காரணமானவர்கள் முதல்வராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீதிபதியின் அறிக்கையும் அதைத்தான் சொல்வதால், தமிழ்நாடு அரசும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதான் என்பது அனைவருக்கும் தெரியும். சசிகலாவும் அறிக்கை குறித்து பெரிதாக எடுக்க கொள்ளவில்லை. ஆனால், ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதி தயாரித்த அறிக்கை போல உள்ளது. உண்மை என்ன என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். இந்த அறிக்கையைத் தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்ப்போம். அரசியல் ரீதியாகத்தான் இந்த ஆணையமே அமைக்கப்பட்டது. இதில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின், ஓ.பி.எஸ் சந்தித்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏதோ போறப்போக்கில் கொளுத்தி போடுகிறார் என தோன்றுகிறது. ஆட்சி அதிகாரம், பண பலம் இருந்ததால் ஆட்டம் போட்டார். தற்போது பயத்தில் இது போல் செயல்படுகிறார். சந்தித்து கொண்டதற்கு சாட்சி இருக்கிறதா என ஓ.பி.எஸ் சேலஞ்ச் செய்கிறார். அதை எதிர்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பொய்யான பிரசாரத்தை தி.மு.க தொடங்கியது. அதனை ஓ.பி.எஸ் கையில் எடுத்துக் கொண்டார். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது. எத்தனை அறிக்கைகள் கொடுத்தாலும் உண்மை அது தான். அறிக்கையை எதிர்த்து பாதிக்கப் பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு நிச்சயமாகச் செல்வர்.

நீதிமன்றத்தில் இந்த ஆணையத்தின் அறிக்கை கண்டனத்துக்கு உள்ளாகலாம். டாக்டர்கள் அந்த நேரத்தில் எது சரியானதோ, அதைச் செய்திருக்கின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மிகப் பெரிய வல்லுநர்கள். அவர்களை எல்லாம் அவமதிக்கும் வகையில் இந்த அறிக்கை உள்ளது. இதை சி.பி.ஐ., விசாரணை நடத்தினால், இந்த அறிக்கை ஏன் தவறுதலாக வந்தது என்ற உண்மை வெளிப்படும். இந்த அறிக்கையில் அரசியல் இருக்கிறது” என்றார்.