மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில், மீனவர் வீரவேலுவுக்கு காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வீரவேலுவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகன் மீனவர் வீரவேல், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சம்பவத்தில் காயைமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, “இந்திய கடற்படை அளித்த விளக்கத்தில், இந்தியா-இலங்கை சர்வதேச எல்லைக்கு அருகே பால்க் விரிகுடாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமான படகு தென்பட்டது. பலமுறை எச்சரித்தும் மீனவர்கள் படகை நிறுத்தவில்லை. அதனால் வழக்கமான நடைமுறையின்படி படகை நிறுத்தும் வகையில் எச்சரிக்கைக்காக சுடப்பட்டது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.