காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் 12-வது ராணுவ தளவாட கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கண்காட்சியில் ‘இன்வெஸ்ட் ஃபார் டிபென்ஸ்’ என்றகருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது:
நமது முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை மட்டுமல்ல, உள்நாடு மற்றும் உலகளாவிய சந்தைகளில் அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும் ஆரோக்கியமான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
2025-ம் ஆண்டுக்குள் பாது காப்பு தளவாட உற்பத்தியை 1,200 கோடி டாலரில் இருந்து 2,200 கோடி டாலராக அதிகரிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் நியாமற்ற வெளிநாட்டுப் போட்டியிலிருந்து நமது உள்நாட்டு தொழிலை பாதுகாக்க வேண்டும். இதற்கான அனைத்து முயற்சிகளும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அதேநேரத்தில் வெளிநாடுகளில் உள்நாட்டு வணிகத்துக்கான சந்தையை பெற நாங்கள் முயன்று வருகிறோம்.
போர் விமானங்கள், விமானம் தாங்கி கப்பல்கள், முதன்மை போர் டாங்கிகள் மற்றும் தாக்குதல் ஹெலிப்டர்களை தயாரிப்பதன் மூலம் நமது தொழில்துறை அதன் திறன்களை வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய காலம் இந்திய பாதுகாப்பு துறையின் பொற்காலம் ஆகும்.
இந்த திட்டங்கள் நல்ல சூழலை உருவாக்கவும் மதிப்புமிக்க அனுபவத்தை பெறவும் உதவியுள்ளன. இந்த அனுபவம் வருங்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த உதவும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.