கிருஷ்ணகிரி : ஓசூரில் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் பழுதடைந்த சாலைகளை போர் கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. இதனால் ராஜகால்வாயில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. குறிப்பாக கே.சி.சி.நகர் வாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
கே.சி.சி.நகரில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக சூழ்ந்த மழைநீர் அரசின் நடவடிக்கையால் தற்போது வடிந்துள்ளது. ஆனால், கால்வாய் நீரால் அடித்து செல்லப்பட்டும், குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் மேயர் சத்யா ஆகியோர் நேற்று நேரில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்தனர். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அவர்கள் உறுதி கூறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.