கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தவர்கள் பலி – ஸ்ரீபெரும்புதூரில் சோகம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள  சத்தியம் கிராண்ட் எனும் பிரபல தனியார் ஹோட்டலில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி சுமார் 30 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டியின் உள்ளேயே மூச்சு திணறல் ஏற்பட்டு விழுந்து சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கழிவு நீர் தொட்டியில் இருந்து சுமார் 15 அடி அளவிற்கு கழிவு நீரை முதல்கட்டமாக இறைத்தனர்.அப்போது மூவரும் கழிவு நீரின் சகதியிலேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

இதன் பின்  மூவரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர்  பல மணி நேரமாக ஈடுபட்டனர். பல மணி நேரத்திற்கு பிறகு மூவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து விபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டது, மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் கழிவு நீரை அகற்றியது, எஸ்சி/எஸ்டி பணியாளர்களை பயன்படுத்தியது, மனிதக் கழிவுகளை மனிதர்களையே அகற்ற பயன்படுத்தியது, எந்த ஒரு பாதுகாப்பு  உபகரணங்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டியில் பணியாற்றியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹோட்டல் மேலாளர் முரளி மற்றும் ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஹோட்டல் உரிமையாளர் சத்தியமூர்த்தி என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகவுள்ள அவரை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தேடி வருகின்றனர். விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.