கன்கெர்: சட்டீஸ்கரில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த கன்கெர் மாவட்டத்தில், 10 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த பைப் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் உள்ளது. அரசு கட்டிடங்கள், போலீசார் மீது இவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காடுகள் நிறைந்த மலைப் பகுதியில் ரிசர்வ் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதர்களில் நடத்தப்பட்ட சோதனையில் பைப் வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டது.
பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்கும் நோக்கத்தில் இந்த பைப் வெடிகுண்டை நக்சல்கள் மறைத்து வைத்துள்ளனர். இரும்பு பைப்பில் 10 கிலோ அளவிற்கு வெடிப்பொருள் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. கோயாலிபேடா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேகாபர் கிராமம் அருகே இந்த வெடிகுண்டு கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், இந்த வெடிகுண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இந்த வெடிகுண்டு மூலம் தாக்்குதல் நடத்தப்பட்டு இருந்தால், பாதுகாப்பு படைகளுக்கு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.