சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள்; அறிமுகம் முதல் திருமணம் வரை அசரவைக்கும் ஆலியா பட் கிராஃப்!

பாலிவுட் நடிகை ஆலியா பட், திரையுலகில் கால் தடம் பதித்து 10 வருடங்கள் ஆகியுள்ளன. இது தொடர்பாக தனது சமூகவலைதளங்களில் அவர், “இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த இடம் கிடைக்கப்பெற்றதற்கு, ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும்! இன்னும் மேன்மேலும் சிறப்பாக செயல்படவும் – ஆழமாக எதிர்காலம் பற்றி கனவு காணவும், உழைக்கவும் செய்வேன். இத்தனை நாள்களாக என்னைச் சுற்றி நிகழ்ந்த எல்லா அதிசயங்களுக்கும் நன்றி. அன்பு, அன்பு மற்றும் அன்பு மட்டுமே!” என்றுள்ளார் ஆலியா.

ரன்பீர் கபூர்-ஆலியா பட்

ஆலியா, முதன்முதலில் கரண் ஜோஹர் இயக்கத்தில் `ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம், 2012-ம் ஆண்டில் திரையுலகுக்கு அறிமுகமானார். டீனேஜ் இளைஞர்களை கவர்ந்த அப்படத்துக்கு பின், ஆலியா நடித்த பல படங்கள் அவரை ஒரு தேர்ந்த நடிகையாக வெளிப்படுத்திக் காட்டின. குறிப்பாக, `இம்தியாஸ் அலியின் ஹைவே’ (2014) படத்தில் ஆலியா குழந்தை பருவத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மீண்டவராகவும், பின் ஒரு கடத்தல்காரருடன் காதல்வயப்பட்டவராகவும் நடித்திருப்பார். அப்படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இதன் பிறகு அவர், பீகாரின் பின்தங்கிய கிராமத்துவாசியாக நடித்த `உப்தா பஞ்சாப்’ திரைப்படமும் அவருக்கு நற்பெயரை பெற்றுத்தந்தது.

இதேபோலதான், டியர் ஸிந்தகி (2016), கல்லி பாய் (2019), ராஸ்ஸி (2018) போன்ற படங்களும் அமைந்தன. தன் நடிப்புக்கு தீனிபோட்ட அவர், இடையிடையே ஹம்ட்டி ஷர்மா கி துல்ஹனியா (2014), அதன் நீட்சியான பத்ரினாத் கி துல்ஹனியா (2017) போன்ற கமெர்ஷியல் ஹிட்ஸையும் மிஸ் செய்யவில்லை. இக்காரணங்களினாலேயே தற்போது ஆலியா இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த கங்குபாய் கதியாவாடி (2022), டார்லிங்க்ஸ் (2022), ஆர்.ஆர்.ஆர் (2021) ஆகிய படங்கள், அவர் கிராஃப்-ஐ இன்னும் பலமாக்கின.

2022-ம் வருடம், புரொஃபஷனலாகவும் பெர்சனலாகவும் ஆலியாவுக்கு இன்னும் ஸ்பெஷலான வருடம். ஏனெனில், இந்த வருடத்தில்தான் அவர் தனது (டார்லிங்க்ஸ் படத்தின் மூலம்) தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். அவருடைய படத்தை ஷாருக்கான் இணை தயாரிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து, தற்போது கர்ப்பமாக உள்ளார் ஆலியா. விரைவில் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கும் 29 வயதாகும் ஆலியா, அடுத்ததாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் `ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

ஆலியா பட்

ரன்பீர் – ஆலியா தம்பதி, திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பத்தை அறிவித்தது இணையதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய போதும், அதை அசால்ட்டாக கடந்து சென்றார் ஆலியா. தன் பெர்சனல் வாழ்வை கேள்வி எழுப்பியோரிடமும் கனிவாக ஆலியா நடந்துகொண்டது, அவரது பக்குவத்தை காட்டுவதாக பலரும் கூறி அவரை பாராட்டினர்.

ஆலியா, “எப்போதுமே ஓர் அழகான விஷயத்தை சொல்லும்போது, அதை எதிர்க்கவும் கூட சில எதிர்ப்பாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள். நிலவில்கூட வடு இருக்கும்தானே…’’ என்றார்.

இந்த நட்சத்திரம் திரையில் உதித்து 10 வருடங்கள் ஆகியிருக்கின்றன. வாழ்த்துகள் ஆலியா!

– இன்பென்ட் ஷீலா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.