சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் முதல் முன்னுரிமை அளிக்கப்பட்ட மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால், மற்ற திட்டங்கள் குறைந்த அளவில்தான் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கிமீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும்,உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கோவளம், கொசஸ்தலையாறு திட்டங்களை முடிக்க 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உள்ளது. இந்நிலையில், சிங்கார சென்னை திட்டம் மற்றும் வெள்ள நிவாரண நிதியின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் முன்னூரிமை ஒன்று மற்றும் முன்னூரிமை இரண்டு என்று வகையாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விவரம்:
சிங்கார சென்னை திட்டம் (முதல் பகுதி)
- முதல் முன்னூரிமை – 97 சதவீதம் நிறைவு
- 2-வது முன்னூரிமை – 15.58 சதவீதம் நிறைவு
- மொத்தம் – 77 சதவீதம் நிறைவு
சிங்கார சென்னை திட்டம் (2வது பகுதி)
- முதல் முன்னூரிமை – 94.19 சதவீதம் நிறைவு
- 2வது முன்னூரிமை – 12.12 சதவீதம் நிறைவு
- மொத்தம் – 77.75 சதவீதம் நிறைவு
வெள்ள நிவாரணத் திட்டம்
- முதல் முன்னூரிமை – 81.94 சதவீதம் நிறைவு
- 2வது முன்னூரிமை – 13.96 சதவீதம் நிறைவு
- மொத்தம் – 66.54 சதவீதம் நிறைவு
உட்டகட்மைப்பு நிதி – 84.91 சதவீதம் நிறைவு | மூலதன நிதி – 97.87 சதவீதம் நிறைவு | உலக வங்க திட்டம் – 95.80 சதவீதம் நிறைவு
இதன்படி பார்த்தால் சென்னையில் மொத்தம் 83 சதவீதம் பணிகள் நிறைபெற்றுள்ளது. கடந்த அக்டோபர் 14-ம் தேதி சென்னையில் பேசிய மேயர் பிரியா, சிங்கார சென்னை திட்டத்தில் முன்னூரிமை ஒன்றில் 97 சதவிகிதம் பணிகளும், உலக வங்கி திட்டத்தில் 94 சதவீதம் பணிகளும் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 8-ம் தேதி பேசிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என்று தெரிவித்தார். இதன்படி பார்த்தால் அமைச்சரும், மேயர் பிரியாவும் கூறியபடி குறிப்பிட்ட திட்டப்பணிகள் மட்டுமே சரியான அளவு நிறைவு பெற்றள்ளன.
ஆனால், சிங்கார சென்னை மற்றும் வெள்ள நிவாரண நிதியில் 2 கட்ட முன்னூரிமை திட்டத்தில் மிகவும் குறைவான அளவில்தான் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. ஆதாவது 10 முதல் 20 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மேலும், புதிதாக மழைநீர் வடிகால்கள் இணைக்கபடாமல் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்களை இணைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.