சென்னை விமான நிலையத்தில் ரூ.2¼ கோடி மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல் செய்த அதிகாரிகள் வெளிநாட்டை சேர்ந்து வாலிபரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கொய்டேம் அரிகே வோல்டி மைக்கேல் (35) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணையும் மேற்கொண்டனர்.
இதில் அவரிடம் இருந்த டிராலி சூட்கேசின் அடியில் ரகசிய அறை அமைத்து அதில் விலை உயர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த ரூ.2 கோடியே 36 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 729 கிராம் மேத்தோ குயிலோன் போதை பவுடரை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்தனர்.
மேலும் போதைப் பொருள் யாருக்காக கடத்தி வந்தார்? இந்த கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.