டெல்லியில் பட்டாசு தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. தலை நகரில் காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் ஆம் ஆத்மி அரசு தடை விதித்து உள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.
“டெல்லியின் காற்று மாசு கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பட்டாசு வெடிக்க எப்படி அனுமதி வழங்க முடியும்? மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கட்டும். உங்களது பணத்தை இனிப்புகளை வாங்க செலவிடுங்கள். பட்டாசு தடை தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள மனுக்களோடு சேர்த்து மனோஜ் திவாரியின் மனுவும் விசாரிக்கப்படும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனிடையே டெல்லி ஆம் ஆத்மி அரசின் பட்டாசு தடை உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி யஷ்வந்த் வர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
பட்டாசு தடை குறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று முன்தினம் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையின்போது காற்று மாசை கட்டுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கும் பட்டாசு தடை அமலில் இருக்கும். வரும் ஜனவரி 1 வரை பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. தடையைமீறுவோருக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தீபாவளி என்பது தீபத்தின் திருவிழா. பட்டாசு திருவிழா கிடையாது. டெல்லியில் இதுவரை 2,917கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.