வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெறவுள்ளது. எனவே, திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிவறை மற்றும் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கோவில் கந்த சஷ்டி திருவிழாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் குடி நீர் வீதம் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன் 30ஆம் தேதி சூரசம்ஹாரத்தை காண வரும் மக்களுக்கு கூடுதலாக 350 அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறார்கள். சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான பக்தர்கள் கூடுவதால் செல்போன் உள்ளிட்டவற்றிற்கு தற்காலிக கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் விரதம் இருப்பதற்காக அதிகப்படியான கொட்டகைகள் அமைக்கப்படும் என்றும் ஆறு இடங்களில் அகன்ற திரைகளின் மூலம் கந்தசஷ்டி நிகழ்வுகள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.