தீபாவளியை முன்னிட்டு பொள்ளாச்சி சந்தையில் ஆடு, சேவல் விற்பனை அமோகம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியில் நேற்று வாரந்தையின் போது, தீபாவளியை முன்னிட்டு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆடு மற்றும் பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனை வாங்க, வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் ஒருபகுதியில், வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதில், மாட்டுச்சந்தை கூடும்போது, அதன் அருகேயே ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்படுகிறது.

ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில், வரும் 24ம் தேதி  தீபாவளி பண்டிகை என்பதால், நேற்று நடந்த சந்தை நாளில் ஆடு வரத்து வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, உடுமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வெள்ளாடு, செம்மரி ஆடு என இரு வகை ஆடுகள் சுமார் 1000க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

 ஆடுகளை வாங்க சுற்றுவட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் அதிகளவில் குவிந்தனர். ஆடுவிற்பனை செய்ய வந்தோர் மற்றும் அதனை வாங்க வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது. இதில் 8கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 8ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரையிலும், 25கிலோ எடைகொண்ட ஆடு ஒன்று ரூ.25ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை என தரத்திற்கேற்ப விலைபோனது.  

அதுபோல், சுற்றுவட்டார கிராமங்களிலில் இருந்து, பலர் பந்தய சேவலை விற்பதற்காக கொண்டு வந்திருந்தனர்.  பந்தய சேவல் ஒன்று ரூ.2000 முதல் ரூ.5,500  வரை விலைபோனது.  தீபாவளியை முன்னிட்டு பந்தய சேவலை வாங்க, அதிகாலை முதலே அதிகம்பேர் குவிந்திருந்தனர். இதில் பெரும்பாலான வியாபாரிகள் உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் என வெளியூரை சேர்ந்தவர்களாக இருந்தனர். மேலும் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட நாட்டுகோழி விற்பனையும் விறுவிறுப்புடன் நடந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.