தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – தொடங்கியது நடவடிக்கை; 4 போலீசார் சஸ்பெண்ட்

தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த திருமலை உத்தரவிட்டார். அதில் கந்தையா மற்றும் தமிழரசன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காவலர் சுடலைக்கண்ணு தனி ஆளாக அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு மொத்தம் 17 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினார். சுடலைக்கண்ணு கிரேடு 1 காவலராக நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு பலர் உயிரிழக்க காரணமாக இருந்தார். 

அதே போல் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் சங்கர், அப்போதைய டிஐஜி கபில்குமார் சாராட்கரரின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்தார். இவரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் உயிரிழக்க காரணமாக இருந்தார். தற்போது இவர் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி, தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் பலரது உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராகவும் உள்ள திருமலை, காவலர்கள் சுடலைக்கண்ணு, சங்கர் மற்றும் சதீஷ் ஆகிய நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.