தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்-க்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த மாதம் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுத்தை இறந்த விவகாரம் தொடர்பாக தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்களான ராஜவேல் மற்றும் தங்கவேல் ஆகியோர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

எம்பி மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, அவரது தோட்டத்தில் கிடை போட்டிருந்த அலெக்ஸ் பாண்டியன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். எனவே அலெக்ஸ்பாண்டியனை விடுவித்து எம்பி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் நலச் சங்கத்தினர் வலியுறுத்தியிருந்தனர். இதேபோல அதிமுக எம்பி ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் இன்று தேனி மாவட்ட வன அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட வன அலுவலர் சமர்தா, ”சிறுத்தை இறந்த இடமானது எம்பி ரவீந்திரநாத் உட்பட மூன்று நபர்கள் பெயரில் உள்ளது. தோட்ட உரிமையாளர்கள் பெயர்களை வருவாய்துறையினரிடம் இருந்து பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் எம்பி-க்கு சொந்தமான இடம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ரவீந்திரநாத் மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் தேனி எம்பி ரவீந்திரநாத், காளியப்பன், தியாகராஜன் ஆகியோருக்கு மாவட்ட வனத்துறை சார்பில் இரண்டு வாரத்திற்குள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறையிடம் பேசினோம். ”சம்பந்தப்பட்ட தோட்டத்தின் உரிமையாளர் என்பதற்காக எம்பி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோருவது சரியானது அல்ல. வனச்சட்டத்தின் படி அவ்வாறு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதும் இல்லை. இருப்பினும் எம்பி தோட்டத்தின் உரிமையாளர் என்ற அடிப்படையில் அவரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணையில் சிறுத்தை உயிரிழப்புக்கு ஒரு வகையில் காரணமாக இருந்தால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும்” என்றனர்.