ஓசூர்: தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூரில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்து கிராமங்கள் தீவு போல் மாறியது. இதனால், மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு, படகு மூலம் பால் மற்றும் குடிநீரை தீயணைப்பு துறையினர் வழங்கி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. ஓசூர் கேசிசி நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து தீவு போல காட்சியளிக்கிறது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடைகளுக்கு செல்லவோ, மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவோ முடியாத நிலை உள்ளது. சிலரது கார்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பகுதியில் உள்ள பாலம் குறுகலாக இருப்பதால், அதில் இருந்தும் தண்ணீர் வெளியேறி வருகிறது. மேலும், தர்கா ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ராஜகால்வாய் வழியாக செல்கிறது. அதிகளவில் தண்ணீர் செல்வதால், அங்குள்ள தடுப்பு சுவர்கள் உடைந்து அந்த தண்ணீரும் வெளியேறி வருகிறது. கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, மேயர் சத்யா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலமாக பால், குடிநீர், மருந்து மாத்திரைகளை தீயணைப்பு துறையினர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல், தேன்கனிக்கோட்டை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏரி, குளங்கள் நிரம்பி தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. தேன்கனிக்கோட்டை பெரிய ஏரி, அர்த்தக்கூர் ஏரியிலிருந்து வரும் வெள்ள நீர், அஞ்செட்டி சாலையில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே பட்டாளம்மன் ஏரிக்கு செல்கிறது. வனத்துறை சோதனைச்சாவடி அருகே 20க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் மழை நீர் புகுந்தது. ஜெனரேட்டர் மற்றும் பொருட்கள், 2 டூவீலர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கெலமங்கலம் அடுத்த குட்டூர் கிராமத்தில் உள்ள ராயலா ஏரி மற்றும் ஹெச்.செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள அருள் ஏரிகளின் கரைகள் உடைந்து, தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது.