அரசு வேலை பெறவேண்டும் எனில் இப்போதும் போட்டி நடக்கத்தான் செய்கிறது. ஆனால், 1962-ம் ஆண்டில் அம்மா சொன்னார் என்பதற்காக அரசு வேலையை விட்டுவிட்டு, தொழிலுக்கு வந்தார் பவர்லால் ஜெயின். ஜெயின் இரிகேஷன் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, எப்படி இவ்வளவு பெரிய சாம்ராயத்தை உருவாக்கினார் என்று பார்ப்போம்.

மகாராஷ்டிராவில் ஜெயின் சமூகத்தில் பிறந்த இவர்களின் பூர்வீகம் ராஜஸ்தான். அங்கிருந்து 1800-களின் இறுதியில் இவர்களின் குடும்பம் மகாராஷ்டிராவுக்கு வந்தது. அங்கு ஜல்கான் (Jalgaon) என்னும் இடத்தில் பள்ளிப் படிப்படை முடித்த பவர்லால், சட்டம் பயில மும்பைக்குச் சென்றார். படித்து முடித்தபின் என்ன செய்யலாம் என்பதுதான் திட்டம்.
இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு எழுதினார். ஆனால், ஐ.ஏ.எஸ் ஆவதற்குத் தேவையான மதிப்பெண் கிடைக்கவில்லை. அதே சமயம், மகாராஷ்டிரா சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதினார். அதில் வெற்றி கிடைத்தது. அரசுப் பணி, நிரந்தர வருமானம் நிச்சயம்.
அதே சமயம், அப்போது பிரபலமான யு.என்.ராய்சோனி என்னும் வழக்கறிஞரிடம் உதவியாளராக சேரும் வாய்ப்பு என இரு வாய்ப்புகள் பவர்லால் வசம் இருந்தன.
அந்த சமயத்தில், ஜெயின் சமூகத்தில் உள்ள முக்கியமான தலைவரிடம் பேசிய பவர்லால், இந்த இரு வாய்ப்புகளைக் குறித்து விளக்கிச் சொல்லி ஆலோசனை கேட்டார். ‘‘ஜெயின் சமூகத்தில் பிறந்து ஏன் வேலைக்கு செல்ல வேண்டும்… சொந்தமாகத் தொழில் தொடங்கலாமே’’ என்னும் ஆலோசனையை வழங்கினார். ஆனால், முதலீடுக்கு எங்கு செல்வது என்கிற கேள்வியை பவர்லால் கேட்க, ‘‘நீ தொழில் செய்யத் தயார் எனில், முதலீடு உன்னைத் தேடி வரும். தேவைப்பட்டால் நான்கூட உதவி செய்வேன்’’ என்று சொன்னார்.

குழப்பமான இந்த சமயத்தில், அம்மாவின் ஆலோசனையை நாடினார் பவர்லால். அம்மாவுக்கு எழுத, படிக்கத் தெரியாது. இந்தத் தொழிலில் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சி எப்படி இருக்கும் என்றும் தெரியாது. ஆனால், நம்மூர் அம்மாக்கள் மாதிரி இல்லாமல், வித்தியாசமான பதிலை சொன்னார்.
‘‘அரசு வேலைக்கோ அல்லது மற்ற வேலைக்கோ சென்றால், நமக்கு மட்டுமல்லாமல் சார்ந்திருப்பவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யலாம். ஆனால், சொந்தமாக தொழில் செய்தால் மட்டுமே பறவை மற்றும் விலங்குகளுக்கு உணவழிக்க முடியும். அதுதான் எனக்கு சந்தோஷம்’’ என தெரிவித்திருக்கிறார்.
‘‘அந்த நொடியில் இருந்து அரசு வேலைக்கோ அல்லது வழக்கறிஞர் வேலைக்கோ செல்ல மாட்டேன்’’ என முடிவெடுத்தார்.
1962-ம் ஆண்டு மூன்று தலைமுறையாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.7,000 இருந்தது.
குடும்பத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தத் தொகை கிடைக்கும். சில மூத்த ஆண்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இவரின் அம்மாவின் வாதத்தால் மூன்று தலைமுறையாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த ரூ.7000 பவர்லால் ஜெயினுக்குக் கிடைத்தது. இந்த தொகைதான் ஜெயின் இர்ரிகேஷனுக்கு மூலதனம்.

இந்தப் பணத்தைக் வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்யத் தொடங்கினார். பெட்ரோல் பங்க் என சில தொழில்களை செய்துவந்தார். அப்போது டீசல் போட்டுக்கொள்ள ஒரு போர்வெல் வாகனம் வந்தது. அதில் ‘Agriculture—a profession with a Future’ என்னும் வாசகம் இருந்தது. அதைக் குறித்து நிறைய யோசித்தார். விவசாயத் துறையில் இருக்கும் பல்வேறு வாய்ப்புகள் பற்றி விசாரித்தார். அதில் இறங்கி, விவசாயம் சார்ந்த பணிகள் அத்தனையும் செய்யத் தொடங்கினார் பவர்லால் ஜெயின். உரம், விதை, மருந்து, விவசாயச் சாதனங்கள் என அனைத்துத் துறைகளிலும் ஈடுபட்டார். 1963-ம் ஆண்டு 10 லட்ச ரூபாய் விற்பனை என்னும் நிலையில் இருந்து, 1978-ம் ஆண்டு 11 கோடி ரூபாய் விற்பனை என்னும் நிலைக்கு நிறுவனம் வளர்ந்தது.
குழுமம் வளர்ச்சி அடையும்போது முதலீடுகளும் விரிவடைந்தன. அவரின் மொழியில் குறிப்பிட வேண்டும் எனில், ‘‘ஒவ்வொரு வெற்றியும் நம் கண்ணை மறைக்கும். அவ்வளவு விரிவாக்க நடவடிக்கைகள் இருந்தன.

ஹார்வேர், கிரானைட், ஐடி நிறுவனம் என ஒன்றுக்கொண்டு சம்பந்தம் இல்லாமல் பல விரிவாக்க நடவடிக்கைகளில் குழுமம் இருந்தது. இதனால் குழுமம் திவால் நிலைமைக்குச் சென்றது. 1997-ம் ஆண்டு ஒரு செய்தித்தாளில் மன்னிப்புக் கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை மோசமானது.
‘‘முதலீட்டாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்களுடைய முடிவுகள் தவறாகிவிட்டன. இதனை சரிசெய்யும் பொறுப்பு என்னுடையது’’ எனப் பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்.
பொதுத்துறை வங்கி ஒன்று 5 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருந்ததால் திவால் நோட்டீஸ் வழங்கியது. ‘‘வந்து எங்களுடைய தொழிற்சாலையை பாருங்கள்; எங்களுடைய முக்கியமான தொழிலில் எந்த சிக்கலும் இல்லை’’ எனக் கூறினார். ஆனால், அதற்கு வங்கியாளர், ‘‘நீங்கள் தாஜ் மகாலே கட்டி இருந்தாலும் எனக்குக் கவலையில்லை; என்னுடைய பணம் எப்போது திரும்ப கிடைக்கும்’’ எனக் கேட்டு அவமானப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை அக்வா இண்டர்நேஷனல் பார்ட்னர்ஸ் என்னும் நிறுவனத்திடம் விற்று, அதன்மூலம் கிடைத்த தொகையை வைத்து நிறுவனத்தை மீட்டார்.

73 சதவிகிதமாக இருந்த குடும்பத்தின் பங்கு 37 சதவிகிதமாக சரிந்தது. 2000-ம் ஆண்டு பங்கின் விலை குறைந்தபட்சம் ரூ.8 என்னும் நிலைக்கு சரிந்தது. 2001-ம் ஆண்டு முதலீடு கிடைத்தது. 2005-ம் ஆண்டு ஒரு பங்கின் விலை 160 ரூபாய் எனும் அளவுக்கு உயர்ந்தது. அதே ஆண்டு முதலீட்டு நிறுவனமும் வெளியேறியது.
வங்கி அல்லாத நிறுவனம்
ஜெயின் இர்ரிகேஷன் என்பது விவசாயத்துக்குத் தேவையான சாதனங்களை வழங்கும் நிறுவனம். ஒவ்வொரு மாநில அரசுகளும் மானியம் வழங்கும். ஆனால், இந்த மானியம் சரியான தேதியில் வராததால், நிதிப் புழக்கத்தில் தட்டுபாடு ஏற்படும். இதனால் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது.
அதனால் கடனுக்கு வழங்குவதை நிறுத்தியது ஜெயின் இரிகேஷன். இதில் விற்பனையில் 35% அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மானியத்தை நம்பி மட்டுமே இருக்கும் விவசாயிகளால் எதையும் பயன்படுத்த முடியாது.
இந்தச் சூழலில் sustainable agro-commercial finance (SAFL) என்னும் வங்கி அல்லாத நிதி நிறுவனத்தை தொடங்கியது. விவசாயிகள் இந்த நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று, மானியம் வந்தவுடன் அடைத்துவிடுவார்கள். இதில் ஜெயின் இர்ரிகேஷன் கணிசமான பங்குகள் இருந்தாலும் மீதமுள்ள பங்குகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தின் உதவியுடன் தொடங்கப்ப்ட்டன.
‘எந்த வங்கி மேலாளர் தாஜ் மஹாலே கட்டியிருந்தாலும் பார்க்க முடியாது’ என்று சொன்னாரோ அந்த வங்கியும் இதில் இணைந்தது.

46 வயதில் மாராடைப்பு, அதனை தொடர்ந்த காலகட்டத்தில் 5 மாரடைப்புகள், இரு இதய அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் நிறுவனத்தை நடத்தினார் பவர்லால். 79 வயது வரை வாழ்ந்த பவர்லால் ஜெயின் 2016-ம் ஆண்டு மறைந்தார்.
ஜெயின் இர்ரிகேஷன் தற்போதும் சிக்கலில் இருக்கிறது. கடன் அதிகமாக இருக்கிறது. அதனால் இவர்களிடன் ரேட்டிங் சரிந்திருக்கிறது. பல முறையில் சரிவில் இருந்து மீண்ட ஜெயின் இப்போதும் மீண்டெலுமா என்பது பவர்லால் ஜெயினின் மகன்கள் கையில் உள்ளது.
‘‘ஒரு வெற்றியாளனின் தோல்வி பக்கங்கள் எனப் புத்தகம் எழுதும் அளவுக்கு தோல்வி கதைகள் என்னிடம் உண்டு. என்னுடைய வாழ்க்கையில் நான்கு முறை திவால் நிலைமைக்கு சென்று மீண்டிருக்கிறேன்’’ என பவர்லால் ஜெயின் கூறியிருக்கிறார்.
பெரிய வெற்றி, பெரிய தோல்வி என்கிற பவர்லாலின் கதை பிசினஸ்மேன்கள் அனைவருக்கும் நல்லதொரு பாடம்!
(திருப்புமுனை தொடரும்)