சென்னை: பொதுமக்கள் பட்டாசு குப்பைகளை தனியாக பிரித்து அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தீபாவளியன்று பட்டாசு குப்பைகள் சேகரிப்பது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசால் தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சியின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், பட்டாசு குப்பைகளை மற்ற எந்தக் குப்பைகளுடனும் கலக்காமல் தினந்தோறும் வகைப்படுத்திய குப்பையை பெற வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் பட்டாசு குப்பைகள் தனியாக சேகரிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.